இந்திய இரசாயனப் பசளை எப்போது வந்துசேருமென்று காத்திருக்கும் விவசாயிகள்!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 65ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் கிடைக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி விவசாயிகளின் மனங்களில் பால்வார்த்துள்ளது. அது மாத்திரமன்றி, அச்செய்தியானது எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அவர்கள் மத்தியில்ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் யூரியா உரமின்றி சிரமங்களை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு, அண்டை நாடான இந்தியாவிலிருந்து யூரியா உரம் கொண்டு வரப்படுகின்ற செய்தி இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால் இவ்வாறு கிடைக்கும் யூரியா உரம் வர்த்தகர்களின் அல்லது பணமுதலைகளின் கைகளுக்குச் சென்று விடாது, உண்மையான விவசாயிகளின் கரங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமாகும். அதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

இந்தியாவிலிருந்து கிடைக்கும் யூரியா உரம் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்ற தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், அதனை சலுகை அல்லது நியாய விலையில் விவசாயிகளுக்கு அரசாங்கம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம், கடந்த 2021ஆம் ஆண்டு சிறுபோகம் வரை விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட இரசாயன உரம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.  

2021பெரும்போக நெற்செய்கையில் யூரியா உள்ளிட்ட இரசாயன உரப் பாவனைக்கு தேசிய ரீதியில் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், சேதன உரப் பாவனையை ஊக்குவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெற்காணிகளில் யூரியா இரசாயன உரம் பிரயோகிக்கப்படாமல் சேதன உரம் மாத்திரம் பிரயோகிக்கப்பட்டது.  

நெற்செய்கையில் இரசாயன உரங்களின் பிரயோகத்தை தவிர்த்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறும் விவசாயிகள், கடந்த பெரும்போகத்தில் யூரியா உரம் பிரயோகிக்கப்படாத நெற்காணிகளில் மிகக் குறைந்தளவு விளைச்சல் அறுவடையின் போது கிடைத்ததாகவும், பெருமளவு நஷ்டமேற்பட்டதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.  

யூரியா இரசாயன உரப் பாவனைக்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, யூரியா உரம் ரூபா 45,000வரையில் அதிக விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதிகரித்த விலைக்கு உரம் கொள்வனவு செய்ய முடியாமல் ஏழை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் காத்திரமான பங்களிப்பு நல்கி வருகின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின மக்களில் அதிகமானவர்கள் விவசாயத்துடன் நேரடித் தொடர்பினையும், மறைமுகத் தொடர்பினையும் கொண்டுள்ளனர். இவ்வாறு வியர்வை சிந்தும் மாவட்ட விவசாயிகளில் அதிகமானவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றமை கவலைக்குரியது.  

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகம், பெரும்போகம் என இரு போகங்களில் நெல் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. பரம்பரை, பரம்பரையாக விவசாயத்தை தங்களது ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டு வரும் மாவட்ட விவசாயிகள், தாங்கள் ஒவ்வொரு போகமும் செய்கை பண்ணும் 05அல்லது அதற்குக் குறைவான ஏக்கர் நெற் காணிகளில் கிடைக்கும் அறுவடை நெல்லை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.  

குறித்த போகத்தில் நெற்செய்கைக்கு ஏற்பட்ட செலவுத் தேவைக்கு அல்லது அதற்கான கடனை ஈடு செய்வதற்காக உடனடியாக நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள், மீதியை தங்களது உணவுத் தேவைக்காகவும், எதிர்வரும் போகத்திற்கான செலவினங்களுக்காகவும் ஒதுக்கிக் கொள்வது வழமையாகும்.  

இது விவசாயிகளின் வழமையான நடைமுறையாகும். ஆனால், தற்போதைய உரம் மற்றும் விவசாய இரசாயனங்களின் தட்டுப்பாடு, அதிகரித்த விலை என்பன சாதாரண விவசாயிகளை விவசாயச் செய்கையிலிருந்து தூரமாக்கியுள்ளது எனலாம். பரம்பரையாக நெற்செய்கையை தங்களது ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டு வந்தவர்களிர் பலர் அதனை தற்பொழுது கைவிட்டு, நாளாந்த கூலிகளாக மாறியுள்ளனர்.  

உரவிற்பனையில் கொள்ளை இலாபம், மோசடி, பதுக்கல், அதிக விலை, செயற்கைத் தட்டுப்பாடு போன்ற நெடிக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியில் விவசாயச் செய்கையை முன்னெடுத்து வரும் உண்மை விவசாயிகளின் கரங்களுக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெறும் யூரியா உரம் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.

முஹமட் றிஸான்
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...