வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் பிரதமர் ரணிலின் நம்பிக்கை தரும் திட்டங்கள்

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தோற்றம் பெற்ற அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, நாட்டைவீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்காக துரித திட்டங்களை வகுத்துள்ளார்.

பிரதமராக முன்னர் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் நெருக்கடிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தனது பதவியை துறந்ததையடுத்து இலங்கை அரசியலில் ஓரிரு நாட்களாகப் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. புதிய பிரதமராகப் பதவியேற்கப் போவது யாரென்பது குறித்து அரசியல் களத்தில் எதுவுமே புரியாத நிலையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

எக்கட்சியைச் சேர்ந்தவர் பிரதமர் பதவியை ஏற்கப் போகின்றார்? அப்பதவியை ஏற்கப் போகின்ற அரசியல் முக்கியஸ்தர யார்? புதிய அமைச்சரவையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் இடம்பெறப் போகின்றார்களா அல்லது கூட்டுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கப் போகின்றார்களா? புதிய பிரதமராகப் போகின்றவருக்கு மக்களின் அங்கீகாரம் இருக்கப் போகின்றதா? புதிய பிரதமராக நியமிக்கப்படுபவரை தற்போது காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துகின்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? 

இவ்வாறெல்லாம் பலவிதமான விடை புரியாத வினாக்கள் சில தினங்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக நிலவி வந்தன. சுருங்கக் கூறுவதாயின் இலங்கையின் அரசியல் களநிலைவரமானது அடுத்த நிமிடத்தில் எவ்வாறு மாற்றமடையப் போகின்றதென்பதே எவருக்கும் புரியாமலிருந்தது. அரசியல் களத்தில் உள்ள அரசியல்வாதிகளால் கூட இதனை ஊகிக்க முடியாதிருந்தது. 

இவ்வாறான நிலையிலேயே புதிய பிரதமராக பதவியைப் பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அரசியல் களத்தில் சில தினங்களாக நிலவி வந்த பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் தணிக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.

ஏனெனில் இன்றைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க வல்லமையுள்ளவராக ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அரசியல் பொதுவெளியில் பேசப்படுகின்றார். அனைத்துக் கட்சியினரும் அதனையே ஒப்புக் கொள்கின்றனர். இன்றைய நெருக்கடியைத் தீர்க்க இயலுமை உள்ளவராக அவரே கணிக்கப்படுகின்றார். அரசியல் நெருக்கடியானது விரைவில் முடிவுக்கு வந்து, நாட்டில் மீண்டும் சுமுக நிலைமை தோன்ற வேண்டுமென்பதே மக்களின் ஒரே ஆதங்கமாக இருந்தது. அரசியலைப் பற்றி சிந்திக்கும் மனோநிலையில் மக்கள் இப்போது இல்லை.

பொருளாதார மீட்சியே மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு, வாழ்க்கைச் செலவு குறைய வேண்டும். அதன் பின்னரே அரசியல் பற்றி சிந்திக்க முடியும் என்பதே மக்களின் எண்ணம்.

உண்மையும் அதுதான். எமது நாட்டுக்கு இன்று தேவையாக உள்ளது வெறுமனே அரசியல் மாத்திரமல்ல. வீழ்ச்சியடைந்து போயுள்ள பொருளாதாரத்தை துரித கதியில் மீளக்கட்டியெழுப்புவதற்கான செயல்திட்டங்களே மிகவும் அவசியமாகவுள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையேற்றம், எரிபொருட்களுக்கான நீண்ட கியூ வரிசை போன்றனவெல்லாம் விரைவில் முடிவுக்கு வந்து தாங்கள் நெருக்கடியற்று நிம்மதியாக வாழும் சூழல் உருவாக வேண்டுமென்பதே சாதாரண மக்களின் ஏக்கம் ஆகும். 

புதிய பிரதமர் நியமனத்துடன் நாட்டில் துரித பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாக வேண்டுமென்பதுதான் மக்கள் உள்ளத்தில் உள்ள பிரதான ஆதங்கமாக உள்ளது. இன்று எமது நாட்டுக்கு அரசியலுக்கு அப்பால் துரிதமான பொருளாதார அபிவிருத்தியே மிக அவசியமாக இருக்கின்றது. இன்றைய வீழ்ச்சியில் இருந்து எமது நாடு எவ்வாறாவது உடனடியாக மீண்டெழ வேண்டும். இல்லையேல் மக்களின் இன்றைய நெருக்கடிகள் மேலும் தீவிரமடைவதற்கான ஆபத்தே தென்படுகின்றது. மக்கள் இதனை விட மேலும் நெருக்கடியைத் தாங்கிக் கொள்வதென்பது இயலாத காரியமாகும்.

பிரதமர் ரணில் நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அனைத்தையும் தெளிவாகவே எடுத்துக் கூறியுள்ளார். நாட்டின் நிதிக் கையிருப்பு குறித்தும், எதிர்கால சவால்கள் பற்றியும் ரணில் விக்கிரமசிங்க அனைத்தையுமே எடுத்துக் கூறி விட்டார். இன்றைய நிலையில் மக்களின் அர்ப்பணிப்பும், பொறுமையுமே மிகவும் அவசியமாகின்றன. ஓரிரு மாதங்களில் நெருக்கடி நிலைமை சீரடைந்து விடுமென நம்புவது தவறு. நெருக்கடி நீங்குவதற்கு பல மாதங்கள் செல்லக் கூடும். நிதிக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வதென்பது இலகுவான காரியமல்ல.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மிகுந்த புரிந்துணர்வுடனும் நல்லிணக்கப்பாட்டுடனும் செயற்பட்டு இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை முதலில் மீட்டெடுக்க வேண்டுமென்பதுதான் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு ஆகும். 

ஆசிய பிராந்திய நாடுகளைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்க மிகுந்த அனுபவமும், ஆற்றலும் வாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றார். எமது அயல்தேசமான இந்தியாவுடனும், மேற்குலகுடனும் மிகுந்த நெருக்கமும் நட்புறவும் கொண்ட அரசியல் தலைவர் அவரென்பது வெளிப்படையான உண்மை. பிரதமராக அவர் பதவியேற்றிருப்பதால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் பெருமளவில் உதவிகள் புரியுமென்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.அவர் பதவியேற்றதுமே சர்வதேச உதவிகள் கிடைப்பதற்கான நம்பிக்ைககள் தென்பட்டு விட்டன.

எது எவ்வாறாயினும், எமது நாட்டில் நிலவிய அரசியல் சர்ச்சைக்கான முற்றுப்புள்ளியாக இன்றைய மாற்றத்தை மக்கள் கருத வேண்டும். நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்டெடுப்பதில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியதே அவசியமாகும். அரசியல் நெருக்கடியென்பதே மென்மேலும் தொடருமானால் நாடு எதிர்காலத்தில் மீண்டெழ முடியாத வீழ்ச்சிக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகி விடும்.

எம்.ராகவன்


Add new comment

Or log in with...