தமிழ் இனத்தின் மீட்சி கல்வி, பொருளாதார வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது

எம் இனத்தின் மீட்சியே ஏக்கங்களோடு உயிர்த்தியாகம் செய்த எம்மவர்களின் ஆன்மா ஈடேற்றத்திற்கு வழிசமைக்கும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிய விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தனது ஊடக அறிக்கையில்;

யுத்தம் மௌனித்து பதின்மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் எமது மக்கள் மனங்களில் பல வடுக்களை ஆழமாக பதித்து விட்டுச் சென்றுள்ளது.

முப்பது வருட கால யுத்தத்தில் நாம் இழந்தவை ஏராளம். அந்த இழப்புக்களை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. ஆனால் படிப்படியாக விழுந்த இடத்தில் இருந்து மீண்டெழ முடியும்.

 அந்த மீட்சியே எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்கு வித்திடும். எமது இனத்தின் மீட்சி கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. நாம் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறும் பட்சத்தில் இழந்தவற்றில் பலவற்றை மீள அடைய முடியும். உயிர் தியாகம் செய்தவர்களை மீளப் பெற முடியாவிட்டாலும் அவர்களின் ஆசிர்வாதம் எமது அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். யுத்த வடுக்களை மனத்திலும், உடலிலும் சுமக்கும் உறவுகளின் மீட்சிக்கு நாம் ஒவ்வொருவரும் கை கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் அதற்கான பல முயற்சிகளை நான் எடுத்திருக்கிறேன். எதிர்காலத்திலும் உங்கள் பிரதிநிதியாக உங்கள் வளர்ச்சிக்கு கை கொடுப்பேன் என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...