பெற்றோல் வழங்க வழியில்லை; 2 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம்

- போதியளவில் டீசல் கையிருப்பில்
- ஏற்கனவே பெற்ற எரிபொருளுக்கு 735 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது

இன்றும் நாளையும் பெற்றோலுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாமென, மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மிகக் குறைந்த அளவிலான பெற்றோலே கையிருப்பில் உள்ளதாகவும் அவற்றை அம்பியூலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெற்றோலை பெற்று சனி, ஞாயிற்றுக்கிழமையே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகித்து நிறைவு செய்ய முடியுமெனவும் அதன் பின்னரே விநியோகிக்க முடியுமென அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆயினும் போதியளவில் டீசல் கையிருப்பில் உள்ளதாகவும், தொடர்ச்சியாக டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் (17) 7,000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனை தனியாக மேற்கொள்ள முடியாது, தங்களிடம் யோசனை காணப்படுமாயின் அதனை தெரிவிக்குமாறு, எதிர்க்கட்சியிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, பல்வேறு நாடுகளிலிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெறக் கூடியதாக இருக்கின்றபோதிலும் அதை ஏன் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுவதாக சுட்டிக் காட்டிய அவர், அது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில் எமது அமைச்சுக்கு இது தொடர்பான 67 யோசனைகள் கிடைத்திருந்ததாகவும். அதில் எம்மால் பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்தக் கூடிய, எமது நாட்டின் தர நிர்ணயத்திற்கு பொருந்தக் கூடிய 39 பரிந்துரைகளை தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன், அதன் விநியோகஸ்தர்களை நாம் நேற்று (17) அழைத்து கலந்துரையாடியிருந்தோம். ஆயினும் கடன் கடிதம் தொடர்பிலேயே பிரச்சினை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஏற்கனவே பெற்ற எரிபொருளுக்காக 735 மில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அரசாங்கம் எனும் வகையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...