எமக்கு அமைச்சு பதவி கிடைத்தால் அது முழு மலையக மக்களுக்குமானதே

தனி மனிதனான தொண்டமானுக்குரியதல்ல 

புதிய பிரதமருக்கு எமது ஆதரவை தெரிவித்துள்ளோம்.  அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அவர் கோரிக்கை முன்வைத்தார். நாளை நாம் அமைச்சு பதவி ஏற்றாலும் அது ஜீவன் தொண்டமானுக்குரிய அமைச்சு பொறுப்பல்ல. அது அனைத்து மலையக மக்களுக்குரிய அமைச்சு பொறுப்பாகுமென இ.தொ.க பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி தெரிவித்தார். 

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், கஷ்டமான காலத்தில் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் நேற்றைய உரையை வரவேற்கிறேன். போராட முடியாத நிலையில் மலைய மக்கள் உள்ளனர். ஒருநாள் சம்பளத்தை விட்டு அவர்களால் வீதியில் இறங்க முடியாதுள்ளது. தற்போதைய நிலையில் கட்சி அரசியல் வேறுபாடின்றி முன்வந்து அனைவரும் செயற்பட வேண்டும். தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியில் வர வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். பிரதமருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குகிறோம். 

வரிமுறையை மாற்றினார்கள். சேதனப் பசளையை ஒரே இரவில் கொண்டுவந்தார்கள். சுமந்திரன் கொண்டு வந்த பிரேரணையை ஆதரித்தோம். மக்களின் குரலாக நாம் செயற்பட வேண்டும். ஐனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம். கஷ்ட காலம் வரும் போது எதிரியை நம்பலாம். ஆனால் நண்பரை நம்பக் கூடாது. நாம் ரணிலுக்கு ஆதரவு என்றபோது பலரும் பாராட்டினார்கள்.வேலுகுமார் பிரதமரானாலும் ஆதரித்திருப்போம்.பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரப்பட வேண்டும். தற்பொழுது கஷ்டப்பட்டாலே எதிர்காலத்தில் நிலைமை சீராகும். 

பிரதமர் எமக்கு அழைப்பு விடுத்தார். ஐனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளோம். ஐனாதிபதிக்கு முரணான கருத்துள்ள பலரும் உள்ளனர். சர்வகட்சி அரசு அமைப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மலைய கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் கவசமாக செயற்பட வேண்டும்.

இ.தொ.க பெரிதாக ஏனைய கூட்டணி கட்சி பெரிதா என்பதல்ல முக்கியம். மக்களை பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும். நாளை, நான் அமைச்சு பதவி ஏற்றாலும் அது ஜீவன் தொண்டமானுக்குரிய அமைச்சு பொறுப்பல்ல. மலையக மக்களுக்குரிய அமைச்சு பொறுப்பாகவே இருக்கும்.   பிரச்சினைகளை தீர்க்க ரணில் விக்கிரமசிங்க முன்வந்துள்ளார். பிரச்சினைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி பிரதமர் கூறியிருந்தார். 

வன்முறைகளின் போது உயிரிழந்தவர்களுக்கு எமது கவலையை தெரிவிக்கிறோம். பலர் கைதாகியுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்,         ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...