மாத்தளை பிரதேச சமூகசேவகர் ஸைனுதீன் மாஸ்டர் காலமானார்

ன்னாள் ஆசிரியரும், முஸ்லிம் விவாகப் பதிவாளரும், சமூக சேவையாளருமான அகில இலங்கை சமாதான நீதவான் முஹமட் ஹனிபா ஸைனுதீன் மாஸ்டர் அண்மையில் காலமானர். அன்னாரின் ஜனாசா கடந்த 07.05.2022 மாலை மாத்தளை கொங்காவல முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 06.05.2022 திடீர் சுகவீனமுற்று மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸைனுதீன் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 85 ஆகும். 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முஹமட் ஹனிபா தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர், மாத்தளை விஜயா கல்லூரியில் கல்வி கற்று விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார்.

அங்கு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று அவர் விஞ்ஞான ஆசிரியரானார். இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த அவர் அயராது பாடுபட்டார். மாத்தளையில் இயங்கும் பல சமூக அமைப்புகளில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும்.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அவர் விஞ்ஞான பாட பயிற்சி பெற்றார். இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியின் பின்னர் ஸைனுதீன் மாஸ்டர் விஞ்ஞான ஆசிரியராக 1962 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட திகாரிய கலகெடிஹேன தாருஸ் முஸ்லிம் மகாவித்தியாலத்திற்கு நியமிக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு மாத்தளை ஸாஹிரா ஆண்கள் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யட்டார்.

மாணவர்களின் உள்ளங்களின் என்றும் மறக்க முடியாத ஆசான்களின் பட்டியலில் ஸைனுதீன் மாஸ்டரும் இடம்பெற்றுள்ளார்.

1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை மாத்தளை ஸாஹிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த இவர் 1977 ஆம் ஆண்டு ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டார். இவரது ஜனாசா நல்லடக்கத்தில் தமிழ், முஸ்லிம் சிங்கள பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம் மஸாஹிம்

(மாத்தளை நிருபர்)

 


Add new comment

Or log in with...