யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 24ஆவது நினைவு தினம் இன்று

யாழ். மாநகர முன்னாள் முதல்வர் அமரர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் அவர்களின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். யாழ். மாநகர மேயராகப் பணியாற்றிய திருமதி சரோஜினி யோகேஸ்வரன் கடந்த 1998 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மாநகர சபையில் முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் மிகுந்த ஆளுமை மிக்கவராக அவர் செயற்பட்டார். நிருவாகத் திறனும், துணிச்சலும் கொண்ட பெண்மணியாக அவர் திகழ்ந்தார். யுத்தம் நிலவிய அக்காலத்தில் மிகுந்த நெருக்கடியான சூழலில் பணியாற்றிய முதல்வராக அவர் விளங்கினார்.

இந்நிலையில் 17. 05.1998 அன்று ஆயுததாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் யாழ் மாநகர முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் அவர்களின் 24ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகத்தில் இன்றைய தினம் நினைவு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பில் முன்னர் அமரர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வு நடைபெற்ற வேளையில் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மர்ஹும் அஷ்ரப் மற்றும் எம். எல்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் பங்குகொண்டு அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது என்று யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் தங்க முகுந்தன் தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார்.

 


Add new comment

Or log in with...