சமூகத்தை விழிப்பூட்டும் கதாப்பிரசங்கங்கள் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும்

ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று முன்னெடுக்கும் கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகளை மனதார பாராட்டுகின்றேன். அது போல் சமூகத்தை விழிப்பூட்டக் கூடிய சமய கதாப்பிரசங்கங்களையும் ஒவ்வொரு ஆலயத்திலும் முன்னெடுத்துச் செல்லுங்கள் எனும் பணிவான வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபை யின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சபையின் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதிகளின் ஒருவராக கலந்து கொண்டதுடன், அருளாளராக சபையின் ஆலோசகரும் கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய பிரதமகுருவுமான சிவஸ்ரீ சீ.கு.கௌரிசங்கர் குருக்கள்,

கோளாவில் ஸ்ரீ கண்ணகிஅம்மன் ஆலய கப்புகனார் பூபாலபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். விசேட அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா, கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ், பிரதேச ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார், ஆலய தலைவர் நா.ஏரம்பமூர்த்தி, கிராம உத்தியோகத்தர் இ. சுமணாரதி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ட. சாமினி, ஓய்வுநிலை அதிபரும் சபையின் முன்னாள் தலைவருமான பெ.தணிகாசலம், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் க.கண்ணதாசன், ஆலையடிவேம்பு வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெகநாதன், நான்கு குடி வண்ணக்குமார், கூட்டுப் பிரார்த்தனை சபை உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வருகை தந்த அதிதிகள் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் வரவேற்கப்பட்டனர். பின்னர் மங்கள விளக்கேற்றலும் இறைவழிபாடும் தமிழ் மொழி வாழ்த்துப்பாவும் பாடப்பட்டன. இதன் பின்னர் வரவேற்புரையினை சபையின் உதவிச் செயலாளர் வே.சிவபாக்கியம் வழங்க தலைமையுரையினை செயலாளர் சௌ.மிதுர்ஷன் ஆற்றினார்.

தொடர்ந்து அதிதிகளினது உரை இடம்பெற்றதுடன் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை சபையின் இறைபணி தொடர்பில் பாராட்டி பேசினர். இச்சபையினை முறையாக வழிநடத்த பல்வேறு உதவிகளை வழங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

இதேநேரம் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகளும் கோளாவில் கலைவாணி கல்லூரியின் முகாமையாளர் டிலோஜனின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது சபையின் தலைவர் சேவையை பாராட்டி கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜினால் அப்பர் சுவாமிகளின் உருவப்படம் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவராசா கலையரசன் எம்.பி, "இந்த நாட்டிலே பாரம்பரியமாக வாழ்கின்ற எமது இனத்திற்குரிய அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. ஆலயங்களின் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன. இதுவே இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது" எனத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், "இன்று பிள்ளைகள் பல்வேறு சமூக சீர்கேடான, சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் இதுபோன்ற கூட்டுப் பிரார்த்தனை சபைகளின் இறைசேவை அளப்பரியது. இதன் மூலம் சமூகத்தை ஒழுக்கமுள்ள சமூகமாக மாற்ற முடியும். பெற்றோர் தமது பிள்ளைகளை சரியான வழியில் கொண்டு செல்லவும் இச்சபை உதவுகின்றது. இச்சபையினை வழிநடத்த முடிந்த உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படும்" எனக் கூறினார்.

இதேநேரம் கடந்த தேர்தலில் திட்டமிடப்பட்டு தேர்தல் களத்தில் சில நபர்கள் இறக்கப்பட்டனர். அதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டது. ஆயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை அம்பாறை மாவட்ட மக்கள் மீது கொண்ட பற்று காரணமாக தேசியப் பட்டியல் உறுப்புரிமையை வழங்கி மாவட்ட மக்களை காப்பாற்றியது. அதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு நன்றி சொல்கின்றேன். ஆனாலும் இந்த வரலாற்று தவறை எதிர்காலத்தில் விடாமல் ஒன்றாக பயணித்து தமிழர்கள் உரிமையை பாதுகாப்பது இங்கு வாழும் மக்களின் கடமை" எனத் தெரிவித்தார்.

(வாச்சிக்குடா விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...