நான்கு சக்கர மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்

- டெஸ்லா நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் கட்கரி அழைப்பு

மின்சாரத்தில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் எலொன் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ள வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  நாட்டின் வாகன உதிரிப் பாகங்கள் கைத்தொழிலுக்கும் சந்தையின் போட்டித்தன்மைக்கும் பெரிதும் நன்மை பயப்பதாக அமைவதோடு, டெஸ்லா நிறுவனத்திற்கும் இந்தியாவுக்கும் இது வெற்றியை பெற்றுத்தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் ரைசினா கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், 'இந்தியாவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இது டெஸ்லா நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் நல்ல சாதகமான நிலைமையாகும். இங்கு எல்லா விதமான வாகனங்களதும் உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளர்கள் காணப்படுகின்றனர்.  இதன் பயனாக டெஸ்லா நிறுவனம் சிறந்த இலாபத்தையும் இந்தியா நல்ல பொருளாதாரத்தையும் அடைந்து கொள்ள முடியும்.

எலொன் மாஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்யத்  தயார் எனில் அதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.  எங்களிடம் திறமையும் தொழில்நுட்பமும் இருக்கின்றது. விற்பனையாளர்களும் உள்ளனர். அவை செலவைக் குறைக்கும். இந்தியா என்பது பெரியதொரு சந்தை. அதனால் டெஸ்லா நிறுவனம் இங்கு வாகனங்களை உற்பத்தி செய்யவும் இங்கிருந்தே ஏற்றுமதி செய்யவும் முடியும். அதற்கு தேவையான துறைமுக வசதிகளும் எங்களிடம் உள்ளன என்றும் சுட்டிகக்காட்டியுள்ளார். 

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர், உள்நாட்டு வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்கள் சகலரும்  உயர் செயற்றிறன் மிக்க விதத்தில் மின்சாரத்தில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை எவ்வாறு உற்பத்தி செய்கிறார்கள் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். குறிப்பாக புதிய தொழில்நுட்பத்திற்கான கேள்வி வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. அதனால் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக டெஸ்லா நிறுவனம் இத்துறையில் சம்பியனாகவே திகழுகின்றது. என்றாலும் இந்நிறுவனம் தமது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய விரும்புமாயின்  அது எமக்கு ஒரு நல்ல முன்மொழிவு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...