ஆசிரியர் சேவையில் நாற்பது வருடங்களை பூர்த்தி செய்யும் திருமதி சாந்தி விஸ்வநாதன்

கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி சாந்தி விஸ்வநாதன் தனது முதன்மைநிலைக் கல்வியை கண்டி அசோகா வித்தியாலயத்திலும், அதன் பின்னர் ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார். 1981ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவிற்கு தெரிவு-செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் ஆசிரியர் நியமனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, மத்திய மாகாணத்தில் புசல்லாவை சி.சி தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.

அங்கு மூன்று ஆண்டுகள் கடமையாற்றியதன் பின்னர் இடமாற்றம் பெற்று 1985ஆம் ஆண்டிலிருந்து கண்டி ரஜவலை தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றினார். 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரை தலவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பக் கல்வித்துறையில் பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர், 1988 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் பயிற்றப்பட்ட ஆசிரியையாக நியமிக்கப்பட்டார்.

கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் இவரது வழிகாட்டலின் கீழ் பல மாணவர்கள் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றி விருதுகளை பெற்றுள்ளார்கள். இவரின் கற்பித்தலின் மூலம் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 22 பேர் சித்தியடைந்து, நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தை கம்பளை கோட்டத்தில் முதலிடத்தையும் கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகளில் மூன்றாம் இடத்தையும் அடையச் செய்த பெருமையும் இவரைச் சேரும்.

அதுமட்டுமன்றி இம்மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் செல்வன் அசோக் ராஜகோபாலன் ஜப்பான் நாட்டிற்கு செல்வதற்காக இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த வகையில் முதலாவது மலையக மாணவனை ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி வைத்த சிறப்பும் இவருக்குரியதாகும்.

இவர் பின்னர் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அங்கும் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் திறன்களையும், ஆற்றல்களையும் இனங்கண்டு தமிழ்த் தினப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெறச் செய்து பரிசில்களை வென்றெடுக்கச் செய்தார். புலமைப்பரிசில் பரீட்சையிலும் வலய மற்றும் மாகாண மட்டத்தில் பல மாணவர்களை முதலிடம் பெறுவதற்கும் வழிகாட்டியுள்ளார். இணைப்புப்பாடமாக சிங்களப் பாடத்தை இடைநிலை மாணவர்களுக்கு கற்பித்து அவர்களையும் அப்பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி அடையச் செய்தார்.

2002 ஆம் ஆண்டில் கல்விமாணிப் பட்டத்தை பெற்றார். மேல்மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் நியமனத்திற்கான போட்டி பரீட்சையிலும் சித்தியடைந்து 2004ஆம் ஆண்டு கொழும்பு வலயத்தில் ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்றார். மேல்மாகாண கல்வித் திணைக்களத்தால் நிகழ்நிலை மூலமாக பயிற்சிகளை வழங்கிய செயற்திட்டத்தில் சிறந்ததோர் வளவாளராக பங்குபற்றினார்.

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்ற 'தரம் 5 புலமைப்பரிசில் இலக்கு தவறாதிருக்க கரம் கொடுத்தல்' எனும் புத்தகத்தில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை மொழிபெயர்த்தும், செயலட்டைகள், வினாத்தாள்களை தயாரித்தும் பங்காற்றி வருகின்றார். உதவிப்பரீட்சகர், கட்டுப்பாட்டு விடைத்தாள் புள்ளியிடல் குழு உறுப்பினர், பிரதம பரீட்சகர் என பல பதவிகளையும் ஏற்று செயற்பட்டு வருகிறார். திருமதி சாந்தி விஸ்வநாதன் ஆசிரியை கல்விச் சேவையில் நாற்பது ஆண்டுகளை நிறைவு செய்வதையிட்டு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கே.சுப்பிரமணியம்
முன்னாள் அதிபர்
க/கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம்


Add new comment

Or log in with...