உலகின் உயர்மட்ட திரைப்படங்கள்; விமர்சகர் ஒருவரின் மனப்பதிவுகள்

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம். டிசெம்பர் 12.16.2016. அந்த 8 நாட்கள், தள்ளாத வயதில் மார்புச்சளியுடன் ஜனசமுத்திரத்திடையே உயர்மட்ட உலகத் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்த விமர்சகர் ஒருவரின் மனப்பதிவுகள்.

நம்மட, பறையாதே, மாறு, பொயிட்டு வரட்டே, அவளின்ர, மோளே, என்ர குட்டியல்லே... இதுபோன்ற வார்த்தைகள் இலங்கையிலும், இந்திய மாநிலங்களில் ஆய்வறிவு கொண்ட மலையாள மொழி பேசும் தென்பகுதிக் கேரளத்திலும் உச்சகரிக்கப்படும் பொழுது,இலங்கைத் தமிழரின் பேச்சுத் தமிழ் இனிமையைக் கண்டு பரவசமானேன்.

அது மட்டுமா? பால் அப்பம், பிட்டு, இடியப்பம், கறி, சோறு, பால் கோப்பி - இவை எல்லாம் இலங்கையில் மலையாள மக்களின் செல்வாக்கை வெளிப்படுத்தும். இன்னும் பல. அதுவல்ல, இங்கு எனது நோக்கம்.

திருவனந்தபுரம் ஒரு பெரிய பட்டணமும், பட்டினமுமாகும். தெற்கில் நாகர்கோவில் ஊடாக கன்னியாகுமரி மாவட்டம் ஈறாகவும், தமிழகத்தின் திருநெல்வேலி முதலாமிடங்களில் கொஞ்சு தமிழ் பேசப்படும் வண்ணமும் இனிமை சொரிகிறது.

கேரள அரசின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பாக ஆண்டுதோறும் அனைத்துலகத் திரைப்பட விழாவை, அங்குள்ள கேரள மாநிலத்தின் சலனச்சித்திர அகெடமி ஒழுங்கு செய்து வருகிறது. 21ஆவது விழாவில் பின்வரும் படங்கள் இடம்பெற்றன.

உலகின் 65 நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 185 படங்கள் திரையரங்குகளில் தினமும் மூன்று நான்கு தடவை காட்டப்பட்டன. மாநகரத்திலுள்ள திரையரங்குகளின் பெயர்கள் தங்கள் தகவலுக்காக: கலாபவன், கைரளி, ஸ்ரீ நிலா, தன்யா, ரெம்யா, நியூ தியேட்டர் ஸ்கிறீன், 1,2,3, தாகூர், ஸ்ரீ பத்மநாபா, அஜந்தா, நிஸாந்தி, ஏரிஸ் பிளெக்ஸ்.

இந்தத் திரைப்பட விழாவிலே அடங்கியிருந்தவை அனைத்துலகப் போட்டிப் படங்கள், இன்றைய மலையாள சினமா, இந்திய சினமா, பால் சார்ந்த படங்கள், புலம்பெயர்ந்தவர்களின் படங்கள், பிரிட்டிஷ் நெறியாளர் கென்லோச்சி படங்களின் மீள்பார்வை, திரையுலகக் கலைஞர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள், அதியுன்னத பழைய படங்கள் ஆகியனவாகும்.

மேலும் உடன்நிகழ்கால (Contemporary) திரைப்பட நெறியாளர் மா ஹன்ஸன் லவ் படம், பழைய கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக அவர் தம் படங்களின் மீள்பார்வை, ஜூரியினர் தேர்ந்தெடுத்த படங்கள், செக்கஸ்லோவாக்கியா, ஸ்லோவாக்கியா நாடுகளின் முன்னைய சிறப்புப் படங்கள், மலையாள நெறியாளர் கே.எஸ்.சேதுமாதவனின் படங்கள் என்ற வகைகளுக்குள் சலன சிந்திரங்கள் காட்டப்பட்டன.

திரைப்படத்துறையை ஆராயும் மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் இந்த விழா அரிய சந்தர்ப்பத்தை அளித்தது. பொதுவாக கேரள மக்களுள் பலர் இடதுசாரித் சிந்தனையுடையவர்கள். ஆதலால், அத்தகைய படங்களின் காட்சிகளே மேலோங்கி நின்றன.

இந்தத் திரைப்பட விழாவிற்கும் கோவாவில் நடைபெறும் அனைத்துலகத் திரைப்பட விழாவிற்கும் இந்திய ஏனைய அனைத்துலகத் திரைப்பட விழாக்களுக்கும் 1990 முதல் தவறாது நான் போய் வருவது வழக்கம். கடந்த சில வருடங்களாக உடல்நலம் குன்றியது காரணமாக நான் போய் வருவதில்லை.

இந்த ஆண்டிலாவது (2016) போய் வரலாம் என்று தீர்மானித்து மூன்று நாள் கழித்து, டிசெம்பர் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஒரு சில படங்களைப் பார்த்தேன்.

11ஆம் திகதி எனது புத்தகம் ஒன்று மணிமேகலை பிரசுரத்தினால் கொழும்பில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அதனால்தான் 12ஆம் திகதி அங்கு போக நேர்ந்தது. போன வேளையில் கபம், மார்புச் சளி, இருமல், தொண்டைப் புண் ஆகியன தொந்தரவு தந்தன. 12ஆம் திகதி முழுநாளும் தியேட்டர் அனுமதிச் சீட்டுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

இடையில் மருத்துவமனையில் 4 மணித்தியாலங்கள் பரிசோதனைக்கு உட்பட்டு, இன்ஜெக்ஸன், இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், நீராவி சுவாசித்தல், மருந்து வகைகள் ஆகியன தரப்பட்டு, சிறிது சுகமானேன்.

நான் பார்த்த படங்கள்:

2013ஆம் ஆண்டில் வெளியான பிலிப்பீனோ படம் - Quick Change, எடு ஆர்டோ, டபிள்யூ ரோய்ஜூனியர் என்பவர் நெறிப்படுத்தியது. உருவத்தில் பெண்ணும், ஜனனேந்திரியம் ஆணினதுமான விலைமாதர்கள், தமது ஏழ்மையைத் தாங்கிக் கொள்ளப் படும் பாட்டைச் சித்திரிக்கும் சமூகவியல் ரீதியான படம். கமரா கதை சொன்னது. வாய்ப் பேச்சுக்கள் சொற்பம். மறைமுகமாக இடம்பெற்ற அழகுபடுத்தும் நிறுவனங்கள் பின்னர் பொலிஸாரினால் அம்பலமாகி அத்தகைய பெண்களின் ஜீவனோபாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

அடுத்த படம் - SINK. தென்னாபிரிக்க நெறியாளர் பிரெட் மைக்கல் இனஸ் நெறிப்படுத்திய படம் கதை மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது.

ஜோஹன்னாஸ்பேர்கில் வேலைக்காரியாக பணிபுரிந்த, மொசாம்பிக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதையில், வெவ்வேறு ஆபிரிக்க கலாசார இன்னலைக் காண முடிந்தது. ரேச்சல் என்ற அப்பெண்ணின் மகள் தென்னாபிரிக்க வீட்டுக்காரரின் வீட்டில் மரணிக்க நேர்கிறது. வீட்டுச் சொந்தக்காரரின் மனைவி தனது முதலாவது பிள்ளையைப் பெறக் காத்திருக்கிறாள். ரேச்சல் உதவி செய்ய முன்வருகிறாள். தனது சொந்த மகள் வீட்டுக்காரரின் கவனக்குறைவால் உயிரிழந்த போதும், ரேச்சல் தனது வறுமையை போக்க அங்கு தங்குகிறாள். இதுவும் ஒரு சமூகப் பிரச்சினையை சொல்லாமற் சொல்கிறது.

கடல் ஆமை – சுனில் சுக்கன் ஆர்:

சுமித்திரா, பாவே ஆகிய இருவரும் நெறிப்படுத்திய சுவாரஸ்யமான விவரணச் சித்திரம் சார்ந்த படம். கறுப்பு நிறக் கடல் ஆமை, கரைக்கு வந்து முட்டைகளை இட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் புகுந்து விடும். பின்னர் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியேறித் தாமே நீந்தி நீந்தி கடலுக்குச் சென்று விடும். இது சுற்றாடலும், இயற்கையும் துணைபுரிய தன்னிச்சையாகவே வளரும் இளம் ஆமைக் குஞ்சுகளின் கதை.

ஈரானியப் படமான LANTOURI வை ரேஸா டோர்மிசியான் நெறிப்படுத்தினார். ஒரு மறைவுலக மாந்தர் கூட்டம். வறியவர்களுக்கு உதவுவது என்ற பெயரில் டெஹரான் மாநகரத்திலுள்ள புதுப்பணக்கார இளைஞர்களிடமிருந்து கொள்ளை அடித்துத் தாமே சுகபோகம் அனுபவித்து வருகிறது. விரக்தியடையும் இளம் பராயத்தினர் வன்செயல்களிலும் சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோரைப் பேட்டி கண்டு இந்தச் சமூகப் பிரச்சினையை ஆராய்கிறது இப்படம்.

CLAIR OBSCURE என்ற படம் ஒரு கூட்டுத் தயாரிப்பு. துருக்கி, ஜேர்மனி, போலந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சம்பந்தப்படுகின்றன. நெறியாளர் யெஸிம் உஸ்டாவோகுளு.

சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக தாம் வரித்துள்ள அரசியல் கோட்பாடுகளுக்கு இணங்க நம்மிடையே பல விவரணக்காரர்களும், விமர்சகர்களும் இருப்பதனால் அவர்களிடம் அந்தப் பணியை விட்டு விட்டு, அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத உளவியல் சித்திரிப்புகள் கொண்ட படங்களையே நான் அதிகம் விரும்புவது. பாத்திரங்களின் அக உணர்வுகளைச் சொல்லாமற் சொல்லும் பாங்கு பல மேலைத்தேயப் படங்களில் அவதானிக்க முடிகிறது. அத்தகைய படம் ஒன்றே, தெளிவு/ தெளிவின்மை என்ற அர்த்தத்தைத் தரும் மேற்சொன்ன படமாகும்.

ஒருவித தடையை எதிர்நோக்கி வளர்ந்த இருவேறு இளம் பெண்களின் கட்டவிழ்ப்பே கதையின் ஓட்டம். சமூகத்தில் காணப்படும் அடக்குமுறைகளில் ஒன்று உளவியல் ரீதியான அடக்கு முறையாகும். இரு வெவ்வேறு இளம் பெண்கள் தமது இயல்பான உள வளர்ச்சியைப் பெறா வண்ணம் உலகறியாமற் வளர்க்கப்பட்டமையும் பின்னர் அவர்கள் அன்பு என்றால் என்ன? தாமும் காதலிக்க முடியும். ஏனையோருடன் உறவுகளை மேற்கொள்ள முடியும் என்பதைப் படிப்படியாக அவர்கள் உணர்கிறார்கள். இந்தப் படம் நான் பார்த்தவற்றுள் ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

அடுத்த படம் STRANGE EAVEN என்ற 2015 இல் வெளியான படம். போலந்தும், சுவீடனும் இணைந்து தயாரிக்கப்பட்டது. டேரியஸ் கஜேய்வ்கி நெறிப்படுத்தியிருந்தார். இந்தப் படமும் எனக்குப் பிடித்தது. இருவேறு நாடுகளின் கலாசாரம், சட்டதிட்டங்கள், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் உதாசீனம், சமூக நலன் கொண்டவர்களின் அக்கறை போன்றவை சம ரீதியாக விளங்கப்படுத்தப்படுகின்றன.

ஆயிரத்தில் ஒருவன் (2009) என்ற மலையாளப் படத்தையும் நான் ரசித்தேன். சி.பி.மலையில் நெறிப்படுத்தியது. யாவருக்கும் உதவும் பண்புள்ள ஒருவன் தன் தங்கையின் திருமணத்தைச் சிறப்பாக நடத்திய பின் ஓட்டாண்டியாகி, கடன் சுமையினால் படாதபாடு படுகிறான். கடன் கொடுத்தவர்கள் அவனை இம்சைக்கு உட்படுத்துகின்றனர். அவர்களுள் ஒருவர் மாத்திரம் விதிவிலக்கு. தனியாளாகிய அந்தப் பெரிய பணக்காரர் சாகு முன்னர், அவனின் கடன் யாவற்றையும் தீர்க்கும் வண்ணம் உதவுகிறார்.

OSCURO ANIMAL

ஸ்பானிய மொழியில் வெளியாகியது இந்தப் படம். ஆர்ஜென்டீனா, கொலம்பியா, கிறீஸ், நெதர்லாந்த் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு இந்தப் படம். நெறியாளர் பெலிப்மே குரோரிரோ.

யுத்தம் நடைபெறும் காட்டுப் பிரதேசம். அங்கு வெவ்வேறு யுத்த முறைகள். கொலம்பியாவில் இராணுவத்தினருக்குத் துணைபோகும் போராளிகள் சிலர் அப்பிராந்திய மக்களை துன்புறுத்தி வருகின்றனர். இவர்களிடையே மூன்று பெண்கள் இக்கொலைக்காரர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றனர்.

இந்தக் குரூரச் சூழலில் மனித குணங்களை இழந்த மிருகமாக அவர்கள் மாறுகின்றனர். ஒருத்தி தனது மூர்க்கமான போராளியைக் கொன்று விட்டு தப்பியோடுகிறாள். இவ்வாறே மற்ற இரு பெண்களும் தப்பியோடுகின்றனர். இந்தப் படம் பெண் விடுதலையைக் கூறாமற் கூறுகிறது.

எழுதுவது கே.எஸ். சிவகுமாரன்


Add new comment

Or log in with...