இலக்கியப்பரப்பில் சமூக மேம்பாட்டு பணிகளுக்காக உழைக்கும் கலைஞன்

'அக்கரைப்பற்று நஜுமு' எனும் பெயரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணியாற்றி வரும் கலாபூஷணம் எம்.ஏ. நஜுமுதீன், ஆளுமையுள்ள படைப்பிலக்கியகர்த்தா. இவர் ஆத்மீக தத்துவங்களின் நிழலாகவும், இலக்கியப் பரப்பில் சக்திமிக்கவராகவும் திகழ்பவர்.

இலக்கியத்தால், சமூகமேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுக்க முடியுமென்ற நம்பிக்கையில் இவரது எழுத்துக்கள் தடம் பதித்து வருகின்றன.

புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் தேசிய ரீதியான ஆக்க இலக்கியப் போட்டிகளில் (2021) இவரது கவிதை, சிறுகதை என்பன முதன்மைப் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது.அரசாங்க ஊழியர் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கிடையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஓய்வுபெற்ற அரசுப்பணியாளரான அக்கரைப்பற்று நஜுமுக்கு கடந்த 23.03.2022 இல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விருதுகள் வழங்கப்பட்டதுடன், நற்சான்றிதழ்களும், ரூபா ஐம்பதினாயிரம் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.இதனால், இவரது பிறப்பிடமான அக்கரைப்பற்று பெருமயடைவதாக இலக்கிய ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபல்யத்தில் அதிக அக்கறை கொள்ளாது தனது இலக்கிய முயற்சிகளை அமைதியாக முன்னெடுக்கும் இவரது படைப்புக்கள், இளைய தலைமுறையினரிடத்திலும் வரவேற்பு பெற்று வருகிறது.18ஆவது வயதில் தினபதியிலும் அதனைத் தொடர்ந்து தினகரன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் அக்கரைப்பற்று நஜ்முவின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

1980 இல் நடாத்தப்பட்ட அம்பாறை மாவட்ட வளர்ந்தோருக்கான சிறுகதைப்போட்டி, நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை உத்தியோகத்தர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கவிதைப்போட்டி, மலர் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த தேசிய ரீதியான கவிதைப் போட்டிகளிலும் இவரது படைப்புக்கள் முதன் மூன்றாமிடங்களைப் பெற்றுக்கொண்டன.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய (2016) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு பொன்விழா மாநாட்டில்,அக்கரைப்பற்று நஜுமுவின் இலக்கியப்பணிகள் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இதற்காக இவருக்கு அக்கரைப்பற்று மண்ணில் “உயர்ந்த மண்” விருதும் வழங்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகரின் நுழைவாயிலில் கம்பீரமாக எழுந்து நிற்கும் வரவேற்பு தோரணத்தில் (Gate Way) இடம் பெற்றிருக்கும் உயிர்ப்பு மிக்க செம்மொழி வசனங்களும் இவரது கைவண்ணங்களே.

ஓய்வு பெற்ற போதும் சமூகமேம்பாட்டுக்காக உணர்வுபூர்வமாக உழைத்துவரும் மனிதநேய கலைஞரான அக்கரைப்பற்று நஜ்மு, அக்கரைப்பற்றின் பிரபல்ய சமூகசேவை இயக்கமான ஏ,எஸ். கழகத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், மத்தியஸ்த ஓய்வூதிய சங்கத் தலைவராகவும், கலாசார மத்திய நிலைய உப தலைவராகவும் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் உயர்பீட உறுப்பினராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

இலக்கியத்திற்கான அரச தேசிய விருதான ‘கலாபூஷணம்’விருதை 2016ல் பெற்றுக்கொண்ட இவரது படைப்புக்கள் ,ஜனரஞ்ஜகமானதுதான். மனிதனின் ஆழமான உணர்வுகளையும் அதன் வெளிப்பாடுகளையும் புரிந்துகொள்ளும் ஒரு கலைஞன், தனது ஆளுமையுடன் அவற்றை இலக்கியமாக்குகின்றான். இவை, காலம் கடந்தும் வாழுமென்பதே கலைஞர்களின் எதிர்பார்ப்பாகும்.

தகவல்:
அக்கரையூரான்...


Add new comment

Or log in with...