பொருளாதார நெருக்கடிக்கு கலவரம், வன்முறை தீர்வாகாது

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழலில் இந்நெருக்கடியின் விளைவாகத் தோற்றம் பெற்றுள்ள அரசியல் நெருக்கடி கொதிநிலையை அடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தையும் பாதிப்புக்களையும் நாட்டின் அனைத்து மக்களும் எதிர்கொண்டுள்ளனர். இந்நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நெருக்கடியும் தொடரவே செய்கின்றன.

இதேநேரம் இந்நெருக்கடி தீர்வு காணுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொழிற் நடவடிக்கைளும் முன்னெடுக்கின்றன. இந்நடவடிக்கைகளில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் ஓரங்கமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை நேற்று முன்தினம் (09 ஆம் திகதி) இராஜினாமாச் செய்தார். அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சரவையும் கலைந்துள்ளது.

ஆன போதிலும் நாடு தற்போது முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றை அமைத்து தீர்வு தேடும் நடவடிக்கையின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அமைச்சரவை இராஜினாமாச் செய்தது. ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த யோசனையை நிராகரித்தன. அதனால் நாட்டின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையொன்றை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி நியமித்தார். ஆனால் பொருளாதார நெருக்கடியோ அரசியல் நெருக்கடியோ தணிந்ததாக இல்லை.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்ததோடு அமைச்சரவையும் கலைந்துள்ளது. அதன் காரணத்தினால் நாட்டின் அரசியல் கொதிநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு தேடும் நோக்கில் சர்வமதத் தலைவர்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை விரைவாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.

நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குவது இந்நாட்டு குடிமக்களின் பொறுப்பாகும். இருந்த போதிலும் நேற்றுமுன்தினம் (09ஆம் திகதி) பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்க கொழும்பு வந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது வன்முறையுடன் கூடிய கலவரத்தில் ஈடுபட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரங்களும் வன்முறைகளும் பரவ வித்திட்டுள்ளன.

இதன் விளைவாக 230 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். அத்தோடு ஸ்ரீ.பொ.பெ. கட்சியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவை மாத்திரமல்லாமல் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லம், அவரது மெதமுலன பூர்வீக இல்லம், டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம், சில முன்னாள் அமைச்சர்களதும், ஸ்ரீ.ல.பொ.பெரமுன கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளதும், உள்ளூராட்சி மன்றங்களது முக்கியஸ்தர்களதும் வீடுகள், சொத்துக்கள் தேசப்படுத்தப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. அத்தோடு பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்க அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் பலவும் உள்ளூராட்சி மன்றங்களது சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இவ்வாறான சூழலில் இவ்விதமான அழிவுகளும் சேதங்களும் எவ்விதத்திலும் நியாயப்படுத்தக்கூடியவை அல்ல. இவ்விதமான அழிவுகளுக்கும் சேதங்களுக்கும் வித்திட்ட மூலகர்த்தாக்கள் உள்ளிட்ட சட்டத்தைக் கையில் எடுத்து கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அதுவே அமைதி, சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதேநேரம் இவ்விதமான அழிவுகளும் சேதங்களும் நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையாது. அவை நெருக்கடியை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும்.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி அனைத்து பிரஜைகளும் பொறுப்புடனும் முன்னவதானதுடனும் செயற்பட வேண்டும். அதுவே நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுத்தரக்கூடியதாக அமையும். இன்றைய அவரசத் தேவையும் அதுதான்.


Add new comment

Or log in with...