சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இராஜினாமா

-ஜனாதிபதியிடம் நேற்று கடிதம் கையளிப்பு

 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் நேற்று பிற்பகல் கையளித்தார்.இதனை ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உறுதி செய்தார். பிரதமர் பதவி விலகியதையடுத்து முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து காலி முகத்திடல் உட்பட நாடு முழுவதும் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பதவி விலகுமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்ததோடு சர்வகட்சி அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இதனை எதிர்க்கட்சிகள் ஏற்காததால் தற்காலிகமாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் இளம் அமைச்சர்கள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தார்.

தொடர்ந்தும் சர்வகட்சி அரசு உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், விலகக் கூடாது எனவும்  மாறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் போது இடைக்கால அரசு அமைப்பதற்காக பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை விலகுவது குறித்து ஆராயப்பட்டதோடு இந்த வாரம் பிரதமர் விலகுவார் என நம்பகரமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் நேற்று விசேட அறிவிப்பொன்று வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலகக் கூடாது என்று கோரி கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்தியது. இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நாடு முழுவதும் குழப்ப நிலை உருவானது.

இந்த நிலையில் பிரதமர் தனது இராஜினாமாவை ஜனாதிபதியிடம் கையளித்ததாக பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அனைத்து கட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி அரசு உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தான் இராஜினாமா செய்வதாக பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு சர்வகட்சி அரசே உகந்தது என மகாசங்கத்தினரும் சட்டத்தரணிகள் சங்கமும் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எந்த அர்ப்பணிப்பிற்கும் தான் தயாராக இருப்பதாகவும் சர்வகட்சி அமைத்து சவால்களுக்கு முகங்கொடுக்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...