கணினியில் நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

வேலை அல்லது பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நிறைய பேர் மடிக்கணினியை நீண்ட நேரம் உபயோகிக்கின்றனர். அதிலும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் தோற்றம் பெற்ற பின்னர் வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களில் பெருபாலானவர்கள் கணினி ஊடாகவே பணியாற்றுவது தெரிந்ததே. அதனால் கணினி முன்பாக அமர்ந்து மணித்தியாலயக்கணக்கில் நேரத்தை செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் கணினி பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

ஆனால் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் முன்பாக நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவதும் பொழுது போக்குக்காக நேரத்தைக் கழிப்பதும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு உடல் உள ஆரோக்கியத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக மடிக்கணினி அல்லது கணினியில் பணியாற்றுவதன் மூலம் அல்லது பொழுது போக்குக்காக நீண்ட நேரத்தைக் கழிக்கும் போது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி, சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும். குறித்த இடத்தில் ஒரே மாதிரியாக நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது உடல் தோற்றத்தின் நிலையிலும் மாற்றத்தை உருவாக்கும். அதாவது ஒரு பக்கமாக சாய்ந்தே உட்கார்ந்து பழகிவிட்டால், எல்லா நேரங்களிலும் அவர்களை அறியாமலே அவ்வாறே அமரக்கூடிய பழக்கம் ஏற்பட்டுவிடும்.

பொதுவாக ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது உடலின் அந்த பகுதி தசைகள் இறுக்கமாகிவிடும். அதன் விளைவாக அப்பகுதிகளில் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படலாம். இந்நிலைமையைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் முதுகுப்பகுதி வளையாத நாற்காலி அமைப்பு இருக்க வேண்டும். கண் பார்வை மட்டத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கு சற்று கீழாகவோ கணினியை வைத்திருப்பது மிகவும் அவசியம். விசைப்பலகையை முழங்கைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்கு வசதியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதேநேரம் தொடர்ச்சியாக கணினி அல்லது மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்களுக்கு அழுத்தம் ஏற்படும். திரை தூரத்தில் இருந்தாலும் கூட கண்களுக்கு சோர்வு ஏற்பட்டு அழுத்தம் உண்டாவது தவிர்க்க முடியாதது. இதனை தடுக்க அறையில் இருக்கும் விளக்கு வெளிச்சம் நேரடியாக கண்களில் பிரதிபலிக்கக்கூடாது. கணினி திரையை சற்று சாய்வாக வைத்திருப்பது நல்லது. திரையின் வெளிச்ச அளவையும் குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி திரையில் இருந்து கண்களை விலக்கி வேறு பக்கம் பார்க்க வேண்டும். பார்வை மங்கலாகவும், தலைவலியும் காணப்படுமாயின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கண் சிகிச்சை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் கணினி திரையில் நீண்ட நேரம் செலவிடும்போது தூங்கும் நேரம் குறைந்துவிடும். திரையிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளியானது மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இதன் விளைவாக இரவில் தூங்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை தலைதூக்கும். இதனைத் தவிர்க்கவென இரவு வேளையில் மடிக்கணினியில் வேலை செய்வதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது நல்லது. அவ்வாறு வேலை செய்ய வேண்டிய நிலை காணப்படுமாயின் 20 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது சில வினாடிகள் கண்களை மூடி திறக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும் தவறக்கூடாது.

அதேநேரம் மடிக்கணினியில் நீண்ட நேரம் பணியாற்றும் போது இரண்டாம் வகை நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அத்தோடு டிஜிட்டல் சாதனங்களில் அதிகம் நேரத்தை செலவிடும் போது உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க இரத்த ஓட்டத்தில் கொழுப்பு சேரவும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க இவை வழிவகுக்கும். அதனால் கணினியில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் துரித உணவு, கொழுப்பு உணவுகள் என்பவற்றை உட்கொள்வதை தவிர்த்து சத்தான பழங்களை சாப்பிடுவது நல்லது.

மடிக்கணினியில் நீண்ட நேரம் வேலைசெய்யும் போது மூளையின் சிந்தனை செயல்முறைக் கட்டமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கலாம். அதாவது மூளையின் சமிக்ஞைகளை பலவீனப்படுத்தி அறிவாற்றல் செயல்முறையை பாதிக்கக்கூடும். அதனால் நினைவாற்றல் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க கண்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டும். தியானமும் செய்யலாம்.


Add new comment

Or log in with...