தாயாரின் பிறந்த தினத்தன்று தனது இலக்கிய நூலை வெளியிட்ட வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன்

தனது தாயார் திருமதி பாலநாகம்மா இராசரெத்தினம் அவர்களது 75 ஆவது பிறந்த நாளில் தனது இலக்கிய நூலை வெளியிட்டு வைத்துள்ளார் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன். அதுமட்டுமன்றி தனது முதலாவது நூலை அனைவருக்கும் இலவசமாக அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றுகின்றார் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன். அவர் எழுதிய கன்னி இலக்கியப் படைப்பான 'ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாட்கள்' என்ற கவிதை நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க கலையரங்கத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செ. யோகராசா கலந்து கொண்டார்.

முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி.வே.விவேகானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலாசிரியரின் தாயாகிய திருமதி பாலநாகம்மா இராசரெத்தினம் அவர்களது 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை தமிழ்ச் சங்கத்தினர் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அறிமுக உரையை மு.செல்வராசா நிகழ்த்த, நூல் வெளியீட்டு உரையை வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

நயவுரையை அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் நிகழ்த்த, வாழ்த்துரைகளை டொக்டர்களான புஷ்பலதா லோகநாதன், பா.யூடி ரமேஷ் ஜெயகுமார் ஆகியோர் நிகழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.க.கலாரஞ்சனி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குண. சுகுணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நூலின் முதல்பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொருளாளர் செல்வராசா பெற்றுக் கொண்டார்.

கதிரவன் த.இன்பராசாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட ஆணையாளர் சட்டத்தரணி மு. கணேசராசாவினால் வரவேற்புரையும், கலைக்கோகிலம் நாட்டியப்பள்ளியினால் வரவேற்பு நடனமும் நிகழ்த்தப்பட்டன.

ஏற்புரையை நூலாசிரியர் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரன் நிகழ்த்த நன்றி உரையை துணை செயலாளர் திருமதி பிரியா கருணாகரன் நிகழ்த்தினார்.

வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் சிறந்த மருத்துவ நிருவாகி மட்டுமல்லாமல், ஓர் உன்னத இலக்கியப் படைப்பாளியுமாவார். 1976 இல் யாழ்ப்பாணம், நெல்லியடியில் பிறந்து, 1985 ஆம் ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பில் வாழ்ந்து வரும் இவர், தனது கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும், மருத்துவ பட்டப்படிப்பை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், மருத்துவ நிர்வாக முதுமாணியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவராக 2005 ஆம் ஆண்டிலிருந்து கடமையை தொடங்கி 2013 ஆம் ஆண்டு கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராகி தற்போதுவரை அங்கு தொடர்ந்து பணிபுரிகின்றார். மருத்துவ அனுபவங்களும் கவிதை அனுபவமும் இணைந்த மருத்துவமனை நாள்களைப் பற்றிய கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது.

வி.ரி. சகாதேவராஜா...

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...