சமூக-தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மூலம் கைவினைஞர் தொழிலுக்கு வலுவூட்டும் ECRAFTT

தொலைதூர கிராமங்களில் உள்ள பல உள்ளூர் கைவினைஞர்களின் இதயங்களில் எதிரொலிக்கும் பெயரே Ecraftt ஆகும். ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியதை, உண்மையான யதார்த்தமாக அது மாற்றியுள்ளது. பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், நவீன கருத்தாக்கத்துடன் உள்ளூர் பாரம்பரிய கைவினைப் பொருட்களை உலகின் முன் கொண்டு செல்லும் பணியில் Ecraftt செயற்பட்டு வருகின்றது.

தூரப் பிரதேசங்களிலுள்ள கைவினைக் கிராமங்களில் தங்களது நேரத்தைச் செலவழிக்கும் திட்டத்தில் பணியாற்றிய மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த வடிவமைப்புத் துறையைச் (Department of Integrated Design) சேர்ந்த வடிவமைப்பாளர்களான மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு கதையே, தற்போது ஒரு புதிய நம்பிக்கையுடன் முழு தொழிற்துறையையும் மீண்டும் உருவாக்கியுள்ளது.

இந்த கைவினை கிராமங்கள் அதற்கு அவசியமானவற்றைப் பெறுவதை உறுதி செய்வதைக் கருத்தில் கொண்டு, ஒரு சில தீர்மானம் மிக்க மாணவர்களால், Ceylon Craft Lab (PVT) Ltd நிறுவனத்தின் ஒன்லைன் தளமாக Ecraftt அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டமான (UNDP) HackaDev மூலம் உதவியளிக்கப்படுகிறது.

இத்திட்டமானது, இலங்கையின் தனித்துவமான இளைஞர்கள் மற்றும் புத்தாக்கத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்புகள் மற்றும் தேவையான அடுத்த தலைமுறை திறன்களை வழங்குவதன் மூலம், அவர்கள் புத்தாக்கம் மிக்கவர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும், நிலைபேறான வகையில் மிகவும் அழுத்தமான அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதற்கு தலைமை தாங்குபவர்களாகவும் மாற உதவுகிறது.

HackaDev Enterprise Support Program (HESP) ஆனது, கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள HackaDev பழைய மாணவர் வலையமைப்பிலுள்ள நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். 2020/21 இல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட முதல் குழுவிலுள்ள 15 நிறுவனங்களுக்கு 6 மாதங்களுக்கான பரந்த மேம்பாட்டு உதவியை வழங்கியது. HESP தலையீட்டின் மூலமான ஆரம்ப நிதியுதவி மற்றும் நடைமுறை பாதுகாப்பு உதவி செயன்முறையை நிர்வகிப்பதற்கான நிபுணர் சேவை வழங்குநராக Curve Up திகழ்கின்றது. அது தொழில்முனைவோரின் பயணத்தில் அவர்களுக்குத் தேவையான உதவியையும் வழிகாட்டல்களையும் வழங்குவதில் வெற்றிகரமாக இருந்து வந்துள்ளதுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான பங்களிப்பையும் வழங்குகிறது.

Ecraftt ஆனது உண்மையான இலங்கை கைவினைப் பொருட்களை கொண்ட நிறுவனமாகும். இது புகழ் பெற்ற முறையான கையால் வரையப்பட்ட பத்திக் வாழ்த்து அட்டைகள் முதல் கைத்தறிகளால் நெசவு செய்யப்பட்ட கைப்பைகள், நூல்களால் பின்னப்பட்ட நெக்லஸ்கள் மற்றும் நெய்யப்பட்ட தும்பறை பெட்டி கைப்பை போன்ற, கைகளால் ஆக்கப்பட்ட பல்வேறு பொருட்களை கொண்டுள்ளது. Ecraftt.com தளமானது, நாட்டின் பாரம்பரிய கைவினை சமூகத்தை வலுவூட்டி, மேம்படுத்தும் அதே வேளையில், இலங்கையில் நிலைபேறான கைவினைத் துறையின் தூரநோக்கை அடையும் வகையில் மேலும் பல வழிகளில் அதன் பலத்தை விரிவுபடுத்துகிறது.

Ecraftt இன் இணை நிறுவுனரும் அதன் பணிப்பாளருமான சமூதிக லியனகே கருத்து வெளியிடுகையில், “இந்நிறுவனமானது, கொள்வனவாளரையும் கைவினைப்பொருட்களையும் இணைப்பதை மாத்திரம் கொண்டதல்ல. இது தொடர்பான கதைகளையும் இணைக்கின்றது. அவ்வாறில்லையெனில் அது யாருமே கேள்விப்படாத ஒன்றாக அமைந்து விடும். கைகளால் வடிவமைக்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளும் தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லக் கூடிய பல கதைகளைக் கொண்டிருக்கும் என்பதை Ecraftt அறிந்துள்ளது. எனவே மக்கள் ஒவ்வொரு முறையும் எம்மிடமிருந்து ஒரு பொருளை வாங்கும் போது, அவர்கள் ஒரு கலைப் படைப்பை பெறுவது மட்டுமல்லாது, இலங்கையின் கைவினைத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகான கதையின் ஒரு பகுதியையும் கொண்டு செல்கிறார்கள்." என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது பணியின் நோக்கம் இன்னும் முடியவில்லை, ஆனால் நாங்கள் உங்களுக்கு சொல்லக் கூடியது யாதெனில், நாங்கள் முன்னேறுவதில் உறுதியாக இருக்கிறோம். எம்மிடம் ஆர்வமுள்ள கைவினைஞர்களின் வலையமைப்பு உள்ளது. அவர்கள் எம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல எமது சிறகுகளாக பணியாற்றுகிறார்கள். நாம் எப்போதும் இந்த வலையமைப்பை மேலும் விரிவுபடுத்த விரும்புவதோடு, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

கைவினைத் தொழில்துறையை சவாலுக்குட்படுத்தும் வகையில், புதிய சூழ்நிலைகளை உருவாக்கி, அனைவரின் கண்களையும் திறக்கும் வகையில் கொவிட்-19 அனைத்து நிலைமைகளையும் மாற்றியமைத்தது. ஆயினும் ஏனைய தளங்களைப் போலல்லாமல், உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளை, பாரம்பரிய கைவினைஞர்கள் பூர்த்தி செய்ய உதவும் ஒரு தளத்தை ஏற்படுத்தும் சவாலை எதிர்கொள்வதற்காக Ecraftt முன்வந்தது. இந்த கைவினைஞர்களை ஆதரவு வழங்குவதன் மூலம், அவர்களின் கதைகள் வெளியில் வருவதையும், விருப்பம், தற்காலபோக்கு மற்றும் சந்தை தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், புதிய பயன்பாடுகள், விடயங்கள் பற்றி அவர்களுக்குக் தெளிவூட்டுவதன் மூலம் வணிக ரீதியிலான தயாரிப்புகளுடன் அவர்கள் போட்டியிடுவதையும் உறுதிசெய்து, Ecraftt அவர்களின் மதிப்பை மேலோங்கச் செய்கிறது.

இலங்கையில் உள்ள UNDP, அதன் பங்காளிகளுடன் இணைந்து, உறுதியான மற்றும் நிலைபேறான நடவடிக்கையின் மூலம் இளம் தொழில்முனைவோரை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதுடன், இதுபோன்ற பல HackaDev மாணவ தொழில்முனைவோருக்கு, அவர்கள் கொவிட் தொற்று மற்றும் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார விளைவுகளிலிருந்து வெளிவருவதற்கும், அவர்கள் சிறப்பாக முன்னோக்கி வெற்றிநடைபோடவும், எதிர்வரும் ஆண்டுகளிலும் ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளது.

Ecraftt மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, www.ecraftt.com எனும் தளத்தைப் பார்வையிடுமாறு கேட்கப்பட்டுள்ளது.

எஸ். கவிந்தன்


Add new comment

Or log in with...