மனிதனுக்கு மனஉளைச்சல் தரும் பாரிய பிரச்சினை உறக்கமின்மை

மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானது உணவு, உடை, உறையுள் என்பார்கள். அவற்றுடன் மிகவும் முக்கியமானது ஆரோக்கியமாகும். ஆரோக்கியம் சிறப்பாக இல்லாவிடின் மனித வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

'உடல் உள சமூக ஆத்மிக நன்னிலையே ஆரோக்கியம்' எனப்படும். 'உடல் பாதித்தால் மனம் பாதிக்கும், - மனம் பாதித்தால் உடல் பாதிக்கும்' என்பது யாவரும் அறிந்த ஒரு விடயம். உதாரணமாக தற்போதைய நெருக்கடி மிகுந்த வாழ்க்கை காரணமாக சமூக பொருளாதார பிரச்சினை மாத்திரமன்றி உடல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. அவ்வாறே உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விடயங்களில் அதி முக்கியமானது நித்திரையின்மை ஆகும்.

மூளை மற்றும் உடல் உழைப்பை பயன்படுத்தி வாழ்கின்ற மனிதர்களுக்கு உடல் உள ஓய்வு மிக அவசியமானது. இதனை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மனிதனுக்கு தினமும் குறைந்தது ஆறு தொடக்கம் எட்டு மணித்தியாலங்கள் சீரான உறக்கம் மிக அவசியம்.    

நித்திரையின்மை என்பது பொதுவாக வயது முதிர்ந்தவர்களில் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். ஏனெனில் முதுமைக் காலத்தில் பொதுவாக மனச்சோர்வு, மனப்பதற்றம், மனக்கவலை போன்ற நிலைகள் அநேகமானோருக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் தற்கால உலகில் இளையவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை கூறும் விடயம் நித்திரையின்மை பிரச்சினையாகும். இப்பிரச்சினை பற்றிய வெளிப்படுத்தலானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது.

உதாரணமாக, சிலருக்கு இரவில் நித்திரையானது அடிக்கடி குழம்பும், சிலருக்கு படுக்கையில் படுத்திருந்தாலும் நித்திரை உண்டாகாது. சிலருக்கு சரியான அளவு நித்திரை இல்லாமல் அதிகாலையில் எழுவர். சிலருக்கு நித்திரை ஏற்பட்டாலும் திருப்தியான நித்திரையாக இருக்காது. காலையில் எழுந்த பின்பும் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்தல் அல்லது பயம், மனக்கவலை, பதற்றம், கோபம் போன்றன காணப்படல்.  

இதைத் தவிர, சிலர் அதிகரித்த வேலைப்பளு காரணமாக அல்லது பரீட்சைகளுக்கு தம்மை தயார் செய்வதற்காக  அல்லது அதிகரித்த தொலைபேசி பாவனை, முகநூல் மற்றும் நவீன இணையத்தள பாவனை காரணமாக இயற்கையால் அருளப்பட்ட நித்திரை எனும் வரப்பிரசாதத்தை வீணடித்துக் கொண்டிருப்பதனால் வெகுவிரைவில் உடல் உள பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்ற உண்மையை உணரத்தான் வேண்டும். இந்நிலைமையை இலகுவாக சீரமைக்கலாம். ஓவ்வொருவரும் தமது வசதிக்கேற்ப நேர அட்டவணைப்படி தமது வேலைகளை முடிப்பதுடன் குறைந்தளவு ஆறு மணி நேர நித்திரையை கடைப்பிடிக்கலாம்.  

வருடாந்தம் பங்குனி மாதம் 18ஆம் திகதி 'உலக உறக்க தினம்' அனுசரிக்கப்படுகிறது. இன்றைய அவசரகால வாழ்க்கையில் தவிர்க்கப்படும் நித்திரையின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு தீர்மானமாக கூறுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்நாள் அமைகின்றது. இவ்வருடத்தின் கருப்பொருள் 'தரமான தூக்கம், நல்ல மனம், மகிழ்ச்சியான உலகம்' ஆகும்.

நித்திரையின்மையானது மனநோய்கள், வலியை ஏற்படுத்தக் கூடிய நோய்கள், மூட்டு நோய்கள், குருதிச்சோகை, ஆஸ்துமா, தைரொயிட் சுரப்பி அளவுக்கதிகமாக செயற்படுதல், இரத்தக் கொதிப்பு, சமிபாட்டுப் பிரச்சினை, போன்றவற்றால் ஏற்படலாம், மேற்குறிப்பிட்டவாறு முதுமைக்காலத்தில், அதிக குடிப்பழக்கம், புகை பிடித்தல், போதைப்பழக்கம், அதிக கோப்பி அருந்துதல், கடன்தொல்லை, அதிகரித்த வேலைப்பளு, விவாகரத்து, கணவன் அல்லது மனைவியை இழந்து தனிமையில் வாழல், பெற்றோரை இழத்தல், குடும்பத்தில் சிக்கல்கள், பயம், மனச்சோர்வு போன்ற மனத்தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைகளிலும் ஏற்படலாம்,

இவற்றைத் தவிர சீரற்ற படுக்கை, படுக்கையறையில் அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் காணப்படுதல், அருகில் அதிக இரைச்சல் அல்லது சத்தம் கேட்டல் போன்ற விடயங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன.  

மேலும் நித்திரையின்மையால் தலைவலி, உடற்பருமன் அதிகரித்தல், மனச்சோர்வு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற தாக்கங்கள் ஏற்படலாம். இவை தவிர இரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற போன்ற நோய்களும் திவிரமடையலாம். நித்திரைக் குறைவு காரணமாக மனித ஆயுள் குறைவடையலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே நித்திரையின்மைக்கு உகந்ந தீர்வுகளை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உள ஆரோக்கியத்தை பேணலாம். இந்நிலைமை வேறு நோய்கள் காரணமாக அல்லது வேறு நோய்களுடன் சேர்ந்து ஏற்பட்டிருந்தால் அக்குறித்த நோய்களுக்கான தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல் வேண்டும். அத்துடன் அம்மருந்துகளை தவறாது உள்ளெடுக்க வேண்டும். 

சரியான நித்திரைப் பழக்கவழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். இதற்காக குறைந்தது ஆறு மணி நேர இடைவெளியில் நித்திரைக்குச் செல்வதற்கான நேரத்தையும், நித்திரை விட்டு எழுவதற்கான நேரத்தையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்நேர அட்டவணையை வார இறுதி நாட்களிலும் எக்காரணம் கொண்டும் மாறாதவாறு இயன்றளவு கடைப்பிடித்தல் வேண்டும்.  

காலையில் போதியளவு ஒழுங்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல். இரவில் மற்றும் படுக்கைக்கு போக நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னராக உடற்பயிற்சி செய்வதை இயன்றளவு தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்போது உருவாகும் அட்ரீனலின் சுரப்பு காரணமாக நித்திரை ஏற்படாது. 

பகலில் கூடியளவு இயற்கை வெளிச்சத்தில் (சூரிய ஒளி) இருக்க பழகிக் கொள்ளல். பகலில் மற்றும் குறிப்பாக மாலையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். படுக்கை அறை மிகவும் சுத்தமாகவும், நறுமணம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். இரவில் படுக்கையறையில் பிரகாசமான வெளிச்சத்தை தவிர்த்து இருளாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். சரியான வெப்பநிலை காற்றோட்டம் மற்றும் சீரான ஒலி பேணப்பட வேண்டும். 

உடலிற்கு ஏற்ற வகையில் படுக்கை மற்றும் தலையணைகள் பேணப்படல் அவசியம். குறைந்தது இரவு உணவு உள்ளெடுத்த நான்கு மணித்தியாலங்களின் பின்னர் நித்திரைக்கு செல்லல் சிறப்பு. நித்திரைக்கு செல்வதற்கு முன் துரித உணவுகள், பொரித்த உணவுகள், அதிக இனிப்பு, காரம் சேர்ந்த உணவுகளையும் மற்றும் அதிகமாக உணவுகளை உள்ளைடுத்தலையும் தவிர்க்க வேண்டும்.  

இலகுவில் சமிபாடடையக் கூடிய உணவுகளை உள்ளெடுக்க வேண்டும். அதிகளவு நீர் அருந்தக் கூடாது. அத்துடன் மாலையிலிருந்து கோப்பி அருந்தக் கூடாது. மது அருந்துதலையும், புகை பிடித்தலையும் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.  

இரவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். நித்திரைக்கு செல்ல முன் இளஞ்சூடான நீரில் குளித்தல். நித்திரைக்கு முன்னராக மனதை அமைதிப்படுத்தக் கூடிய வகையில் தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை வாசித்தல், பஜனைப் பாடல்களை அல்லது இசையை கிரகித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடலாம். 

இரவில் படுக்கைக்கு போக இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் கைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றின் பாவனையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றை ஆர்வத்துடன் பயன்படுத்துவதால் உறங்கும் நேரத்தில் இயற்கையாக சுரக்க வேண்டிய மெலரோனின் எனும் ஹோமோன் சுரத்தலானது தடைப்படுவதால் நித்திரை ஏற்படாது. அத்துடன் கைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற மின்உபகரணங்களை அணைத்து விட்டு படுக்கைக்கு வெகு தொலைவில் வைக்க வேண்டும்.  

இவ்வழிகளால் கூட நிவர்த்திக்க முடியாத வகையில் நித்திரையின்மை பிரச்சினை தொடருமாயின் தகுந்த மருத்துவரை நாடி சிகிச்சை பெற வேண்டியது மிக அவசியம்.  

மேற்கூறப்பட்ட வழிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பதன் மூலம் நித்திரையின்மை எனும் பூதத்தை விரட்டி நாமும் ஆரோக்கியமாக வாழ்ந்து மற்றவர்களையும் ஆரோக்கியமாக வாழ வழியமைக்கலாம். 

வைத்திய கலாநிதி
செல்வி வினோதா சண்முகராஜா
(சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

கலாநிதி
திருமதி கௌரி ராஜ்குமார்
(சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்,  
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்)


Add new comment

Or log in with...