21 விமான குத்தகை; 3 மாதங்கள் ஒத்திவைக்குமாறு ஸ்ரீ லங்கன் நிறுவனத்துக்கு CoPE பரிந்துரை

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், இன்று (25) பரிந்துரைத்தார்.

இதற்கமைய தற்பொழுது காணப்படும் பொருளாதார நிலைமையின் கீழ் முழுமையான செயற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், உரிய கொள்முதல் செயல்முறை உரிய  நடைமுறைகளுக்கு இணங்குகிறதா என்பது பற்றி ஆராயுமாறும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கொள்முதல் வழிகாட்டலை உரிய முறையில் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட கொள்முதல் செயன்முறையை அமைச்சரின் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை அமைச்சரவை முடிவாக இதனை முன்னெடுக்குமாறும் கோப் தலைவர் இங்கு பரிந்துரைத்தார்.

விமானங்களின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் நாட்டின் நெருக்கடி நிலைமை காணப்படுவதால் இது குறித்து அதிக கவனம் செலுத்தி உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்தாடலைத் தொடர்ந்து இதுபற்றி ஆராய்வற்கு இந்நிறுவனம் இன்று (25) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் தற்பொழுது காணப்படும் 24 விமானங்களில் எண்ணிக்கை சில காலங்களில் குறைவடையும் என்றும், விமானங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்து விளம்பரத்தைப் பிரசுரித்திருந்ததாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகே மற்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, இந்த செயல்முறை 6-12 மாதங்களுக்கு இடையில் எடுக்கும், மேலும் இந்த நடவடிக்கைகள் அமைச்சின் ஊடாக மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்று பத்திரகே கூறினார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை மேம்படுத்துவதற்கு நாட்டின் நிர்வாகத்தில் உயர் அனுபவம் கொண்ட நிபுணர்கள் குழுவின் முயற்சிகளை கோப் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாரியளவில் பணியாளர்களின் கொடுப்பனவைக் குறைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய விமான சேவையின் தலைவர், நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பங்களிப்பையும் அவர் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் அமைச்சர்  நாலக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான  டி.வி.சானக்க,  இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான  மஹிந்த அமரவீர,  பாட்டலி சம்பிக்க ரணவக்க,  (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா,  இரான் விக்கிரமரத்ன, எஸ்.எம் மரிக்கார்,   மதுர விதானகே,  பிரேம்நாத் சி தொலவத்த, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...