அதிபர், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்

இன்று மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. (படங்கள்: ஹட்டன் சுழற்சி நிருபர்)

- சுகவீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பிய ஆசிரியர்கள்

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட வாழ்க்கை சுமை, மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிபர், ஆசியர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பாலசேகரம் நேற்று (24) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தினால் அரசாங்கத்திற்கு முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளாவது,

1. பாடசாலைகளுக்கு செல்லும் ஆசியர் சமூகத்திற்கு போக்குவரத்து கட்டணமாக மாதாந்தம் தொகை ஒன்றை வழங்க வேண்டும்.

இன்றைய காலத்தில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ்கட்டண அதிகரிப்பை கருத்திற்கொண்டு  போக்குவரத்து கட்டணத்தை  தமது சம்பள பணத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

2. மாணவர்களின் நலன் கருதி தனியார் மற்றும் இ.போ.சபை சேவை பஸ்களில் அரைவாசி கட்டணத்தை அறவிட அரசு பரிந்துரைக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், வாழ்வாதாரத்தில் பாரிய பின்னடைவையும் எதிர் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வினால் மாணவர்கள் தினமும் பொருளாதார பிரச்சினக்கு சிக்கி தவிப்பதை தெளிவாக அறியமுடிகிறது.

எனவே பாடசாலைக்கு பஸ் ஊடாக பயணிக்கும் மாணவர்களின் நலன் கருதி தனியார் மற்றும் இ.போ.சபை சேவை பஸ்களில் அரைவாசி கட்டணத்தை அறவிட அரசு பரிந்துரைக்க வேண்டும்.

மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் இவ்விடயத்தில் கருணை அடிப்படையில் செயற்பட முன் வர வேண்டுவது,அரசாங்க பஸ்சேவையில் இந்த நடைமுறையை உடனடியாக அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்து தமது சங்கம் இப்போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக, எஸ். பாலசேகரம் தெரிவித்தார்.

அத்துடன் இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மலையகம் உள்ளிட்ட நாட்டில் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர் சமூகத்தினரும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

ஆ. ரமேஸ்
படங்கள்: ஹட்டன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...