ரம்புக்கனையில் பவுசர் தீ வைக்க முயற்சித்த சம்பவம்; கைதான சந்தேகநபருக்கு பிணை

Rambukkana Incident-Supsect-Whom Arrested by CID-Released on Bail

- பிணையாளர் இல்லாமையால் விளக்கமறியலில்

ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (22) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் இன்றையதினம் (23) பிற்பகல் கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்போது, சந்தேகநபரை ரூ. 100,000 கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஆயினும் பிணையாளர்கள் இன்மையால், பிணை நிபந்தனை பூர்த்தி செய்யப்படாமை தொடர்பில் குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கனை, பின்னவல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்தின்போது, பச்சை நிற ரீசேர்ட்டும், இராணுவ ஆடைக்கு ஒப்பான காற்சட்டையும் அணிந்திருந்த குறித்த சந்தேகநபர் புகையிரத பாதை குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் பவுசரின் முன்னால் தீப்பிடிக்கும் பகுதியில் இருந்த மரக்கொத்தொன்றை எடுத்து வீசி விட்டு அங்கிருந்து செல்லுகின்ற வீடியோ காட்சியொன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...