எரிபொருள் போக்குவரத்து பவுசர்கள், புகையிரதங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

அனைத்து எரிபொருள் பவுசர்கள் மற்றும் புகையிரதங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, உத்தரவாதமளிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் விநியோகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறில்லையாயின், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதில் பாரிய சிக்கல் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தடைப்படுமானால், அத்தியாவசிய உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தடைப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து எரிபொருள் போக்குவரத்து பவுசர்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தாமல் போராட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமான எரிபொருள் மற்றும் டீசல் இறக்கும் பணிகளும் இடம்பெறுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...