குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக மாறக் கூடிய விபரீத செயற்பாடுகள்

அழுகின்ற பிள்ளையை  அமைதிப்படுத்துவதற்கு  வழி இதுவல்ல!

சிறுவர் உரிமை சமவாயத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்களே. மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்துடையது போல, சிறுவர்களுக்கு உரித்தாக்கப்பட்ட உரிமைகள் பற்றிய உறுப்புரைகள் இச்சிறுவர் உரிமை சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இயற்கையாகவே, சிறுவர்களின் மொழி, நடை, பாவனை என்பன ரசிக்கத்தக்கவை. அவர்கள் சமூகத்தில் காணப்படும் பன்முகத்தன்மையினால் வேறுபட்டிருந்தாலும் உளரீதியாக ஒன்றுபட்டவர்களே. இச்சிறுவர்களுக்கு விளையும் அச்சுறுத்தல்கள் பாரியளவிலானவை. அவர்களை சுற்றியுள்ளவர்களே அவர்களை துன்புறுத்தும் செயற்பாடு நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. மானிடர் என்ற முறையில், சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டியது எமது கடமையாகின்றது.

அதாவது ஒரு சிறுவருக்கு, இன்னுமொரு சிறுவரால் அல்லது வயது வந்தவர்களால் வேண்டுமென்றே தீங்கு பயக்கும் செயற்பாடு சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்படும். அதேவேளை, ஒரு செயலின் மூலமாகவோ அல்லது செயல்பட தவறுதலின் மூலமாகவோ ஒரு பிள்ளைக்கு காயம், இறப்பு, உணர்ச்சித் தாக்கம் அல்லது கடுமையான தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடும் சிறுவர் துஷ்பிரயோகமாக கருதப்படும்.

துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இவை, இன்று வரைக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு என்று வகைப்பட்டுள்ளன.

'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்' என்று முன்னோர்களால் கூறப்பட்ட ஒரு விடயம், மருவி, இன்று சிறுவர்களுக்கு எதிராக வன்முறையை தோற்றுவிக்கும் ஒன்றாக திரிபடைந்து விட்டது. முன்னோர்களால் இங்கு 'அடி' என்று குறிப்பிடப்பட்டது இறைவனின் பாதமாகும். இடர் வரும் வேளையில் இறை பாதம் நாடினால், உற்றார் உறவினர் எவர் உதவியையும் எதிர்பார்க்க தேவையில்லை என்பதே இக் கூற்றின் கருத்தாகும். ஆனால், இப் பொருள் காலத்தின் போக்கில் மருவி, அடிப்பது மட்டுமே பயனளிக்க கூடும் என்ற தப்பான எண்ணக்கருவின் போர்வைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் ஓர் செயற்பாடாக காணப்படுகின்றது.

சிறுவர்களைச் சுற்றியுள்ளவர்கள் சிந்திக்கத் தவறும் பட்சத்தில் கூட இந்த உடலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகின்றது. இது அவர்களின் அறியாமையினால் இடம்பெறுகின்றது. நாளாந்த வாழ்க்கையில், பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு தம் விருப்பப்படி மேற்கொள்ளும் சில செயற்பாடுகள், பிற்காலத்தில் அவர்களுக்கு எதிர்பாராத எதிர்மறை தாக்கத்தை தோற்றுவிக்கும். வளர்ந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். அனால் மழலைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி நாம் அறிந்திருக்க தவறி இருப்போம். இதில் ஒன்று தான் குழந்தைகளை குலுக்குவதன் மூலமாக ஏற்படும் நோய்க்குறி ஆகும். இது பிள்ளையின் மூளையை பாதிக்கும் ஒரு செயலாகும்.

பிள்ளைகள் வளர்ந்தவர்களில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்களின் உடலியல் தகுதி மற்றும் உளவியல் தகுதி என்பன முற்றான வளர்ச்சிக்கு உட்பட்டவையல்ல. அவர்களின் உடல் மென்மையானது. அது போல உடலின் உட்பாகங்களான மூளை, தசைப்பகுதி, நரம்புகள், என்புகள், மூட்டுக்கள் என்பன பலவீனமானவை. இவ்வாறிருக்க, அவர்களை வேகமாக அசைப்பதன் மூலம் அல்லது, வேகமாக குலுக்குவதன் மூலம் மேற்குறிப்பிட்ட நோய்க்குறி ஏற்படுகின்றது.

இச்செயற்பாட்டின் போது பிள்ளையின் உடல் எதிர்பாராமல் தீவிர அசைவிற்கு உள்ளாகின்றது. இது பிள்ளையின் தன்னிச்சை செயற்பாடில்லாமல், மூன்றாம் நபர் செயற்பாடால் நடைபெறுகின்றது. இதன் போது பிள்ளையின் மண்டை ஓட்டிற்குள் உள்ள மூளையானது, பிள்ளையோடு சேர்ந்து அசைவிற்கு உள்ளாகின்றது. இவ்வேளையில், அந்த மென்மையான மூளை மண்டையோட்டில் மோதி இரத்தக்கசிவு ஏற்படுகின்றது. இது பிள்ளையின் மூளை சிதைவிற்கு காரணமாக அமைகின்றது. இச்செயற்பாடு சில வளர்ந்த நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாகும். எடுத்துக்காட்டாக, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்க நீதிமன்றம், பிள்ளையை குலுக்கி அதன் மூளைக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் செயற்பட்ட பராமரிப்பாளர் ஒருவருக்கு பத்து அரை வருடம் கடும்காவல் தண்டனை வித்தித்துள்ளது. இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் குறித்த பிள்ளையின் தந்தை 'இது எனது மகனுக்கும், என் மனைவிக்கும், எனக்கும், எங்கள் குடும்பத்திற்கும் கிடைத்த ஆயுள் தண்டனையாகும்' என்று கூறியிருந்தார்.

சில நேரங்களில் பிள்ளைகள் அழுவதற்கான காரணங்களை கண்டறிய முடியாது. அவ் வேளைகளில் 'குழந்தைகள் இதற்காகத்தான் அழுகின்றார்களோ!' என்று பெரியவர்களே ஒரு முடிவிற்கு வருவார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில், அவ் அழுகையை நிறுத்துவதற்கு பிள்ளையை சிரிக்க வைக்க முயலுவர். இதன் போது அவர்களை தூக்கி குலுக்குதல், அசைத்தல், எறிந்து பிடித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறான நேரங்களில், இந்த நோய்க்குறி நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல், சில நேரங்களில் அவர்களின் அழுகை பிறருக்கு கோபத்தை விளைவிக்கும். அப்பொழுது அக்கோபத்தை தணிக்க பிள்ளையை இறுக்கப் பற்றுதல், தலையில் அடிபட வைத்தல், மற்றும் வேகமாக நகர்த்துதல் போன்ற தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளில் அறியாமல் ஈடுபடுவர்.

இந்தச் செயல், பிள்ளையின் மூளையில் இரத்தப்போக்கு, சிராய்ப்பு, வீக்கம் என்பவற்றை தோற்றுவிக்கும். இதன் உடனடி வெளிப்பாடாக, சில சமயங்களில் காது, வாய், மூக்கு வழியாக இரத்தம் வெளியேறும். இந்த நேரத்தில் மருத்துவரின் அவசர உதவி இன்றியமையாததாகும். அனால் அநேகமான நேரங்களில் இதன் வெளிப்பாடானது காலம் கடந்தே காண்பிக்கப்படும். அதாவது, மனவளர்ச்சி குறைபாடு, குன்றிய உடல் உறுப்புக்கள், மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றம், ஹோர்மோன் சார் பிரச்சினைகள் போன்றவை பிள்ளையை ஆட்கொள்ளும்.

இந்த நோய்குறி, ஒருவருக்கு ஒருவரில் இருந்து வேறுபட்டது. இதை அறிந்து கொள்ள சில அறிகுறிகள் காணப்படுகின்றன. அவையாவன, திடீர் காய்ச்சல், பிள்ளையின் தோல் வெளிறுதல் அல்லது நீல நிறமாகுதல், உணர்விழந்த முழு மயக்க நிலை (கோமா), முடக்குவாதம், சுவாசிப்பதில் சிரமம், அதிகப்படியான எரிச்சல், விழித்திருப்பதில் சிரமம், உணவு உண்பதில் சிரமம் மற்றும் சில பிள்ளைகளுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. இதை செவ்வனே புரிய, பெற்றோரின் ஆரோக்கியமான மனநலம் மற்றும் பிள்ளைகள் மீதான கவனிப்பு இன்றியமையாததாகும். சிறுவர்களை அன்போடும், பணிவோடும், அவர்களது சுயமரியாதைக்கு களங்கம் விளைவிக்கா வண்ணம் நடத்துவதன் மூலம், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் உறுதுணையாக விளங்குவோம்.

விவேதா குணரெட்ணம்,

திட்ட அலுவலர், எங்குமுள்ள

சிறுவர்களையும் சூழலையும்

பாதுகாக்கும் அமைப்பு

(PEaCE/ ECPAT Sri Lanka)


Add new comment

Or log in with...