இலக்கியவாதிகளை ஒரேகுடையில் ஒன்றிணைத்து பணியாற்றி வரும் கவிஞர் கலா விஸ்வநாதன்

களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள தோட்டத்தில் 15.01.1954இல் பிறந்த பிறவிக் கலைஞன் கலா விஸ்வநாதன் இரத்தினபுரி பரி.லூக்கா கல்லூரியில் கல்வி பயிலும் காலத்திலே கவிதை எழுத ஆரம்பித்தவர். மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச்செயலாளர் இரத்தினபுரி அ.பிலிப் மாஸ்டரோடு இணைந்து பல்வேறு கலை இலக்கிய சமூக ஆன்மீகப் பணிகளில் மாணவப் பருவத்திலேயே ஈடுபடலானார்.  

 இவர் முதன் முதல் எழுதிய கவிதை இரத்தினபுரி திருவானக்கட்டை சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தின நிகழ்வில் அரங்கேற்றம் பெற்றது. 'அன்பு வாழ்க்கை' எனும் தலைப்பில் எழுதிய கவிதை டிக்கோயாவிலிருந்து வெளியான 'ஸ்ரீசிபாகிரிதி' சஞ்சிகையில் முதன் முதலில் பிரசுரமாகியது.  

 'குயிலோசை' எனும் கையெழுத்து சஞ்சிகையை ஆரம்பித்து எழுத்துப் பணி ஆற்றியுள்ளார். அதன் தொடராய் 1974ல் 'குயில் வீணை' எனும் சிறு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானார்.  

 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் நடத்திய தமிழ்_ -சிங்கள ஒருமைப்பாட்டு மாநாட்டின் முன்னோடி நிகழ்விற்கு இரத்தினபுரியில் கிளையை நிறுவி, பிரசாரப் பணிகளை ஏற்பாடு செய்து மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர். இந்த நிகழ்வில் பிரேம்ஜி, இரா.சிவலிங்கம், சோமகாந்தன் உட்பட பலரரும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.  

 1970களில் மலையக இளைஞர் முன்னணிக் கூட்டங்களை இரத்தினபுரியில் ஏற்பாடு செய்த இவர், தொழில் நிமித்தமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். தலைநகரில் இருந்து கொண்டே இரத்தினபுரியில் சப்ரகமுவ சாகித்திய சம்மேளனத்தை ஸ்தாபித்து எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு, இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்.  

கவிப்பேரரசு கண்ணதாசன் மன்றத்தை 1980களில் கொழும்பில் ஆரம்பித்து பல கவியரங்குகளை நடத்தி கொழும்பு கலைஞர்களுடன் இணைந்து, கலையார்வத்தை ஏற்படுத்தினார். அத்தோடு 'மலையக கவிஞர் சங்கம்' ஆரம்பித்து ஒன்றுகூடலை ஏற்படுத்த முனைந்தவர்.  

 'கவின்' 'ஜனநேசன்', 'மட்டக்குளியான்' ஆகிய புனைபெயர்களில் பத்திரிகைகளுக்கு கவிதைகளை எழுதியுள்ளதோடு, 2003ஆம் ஆண்டில் வீரகேசரியில் தொடராக எழுதிய 'மனித ஏணிகள்' எனும் மலையக காவியத்தையும் மேலும் சில கவிதைகளையும் தொகுத்து 'மனித ஏணிகள்' என்னும் கவிதை நூலை மட்டக்குளி காக்கைதீவு வரவேற்பு மண்டபத்தில் வெளியிட்டார்.  

மட்டக்குளி அருள்மிகு ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியை போற்றித் துதித்து 'ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கவசம்' எழுதிய கவிஞரை மட்டக்குளி அறநெறி மன்றம் 'கவிமாமணி' எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.  

மேலும் பல சமூக கலை இலக்கிய அமைப்புக்கள் 'கவிவள்ளல்', 'கவிச்சுடர்', 'கலாசோதி' ஆகிய சிறப்பு கௌரவங்களை வழங்கியுள்ளன.  

 'வலம்புரி கவிதா'(வகவம்) வட்டத்தில் இணைந்து இன்றுவரை பணியாற்றி வரும் கலா விஸ்வநாதன் வலம்புரி கவிதா வட்டத்தின் பிரசார செயலாளர், பொதுச்செயலாளர், தலைவர், தேசிய அமைப்பாளர் எனப் பல பதவிகளை வகித்து இன்றும் வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்.    2013இல் மீண்டும் புனர்நிர்வாகம் பெற்ற வலம்புரி கவிதா வட்டம் தனது ஆண்டு விழாவை 2015இல் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடத்தியபோது கவிஞர் கலா விஸ்வநாதன் வகவத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  

 'கொழும்பு இலக்கிய வட்டம்' எனும் ஓர் அமைப்பை அமைத்து கலை இலக்கிய சந்திப்புகள் ஏற்பாடு செய்ததுடன் விமர்சன கருத்தரங்குகள், அஞ்சலி நிகழ்வுகள் நடத்தியதுடன் மேல்மாகாண சாகித்திய விழா நடைபெறுவதற்கும் உந்துசக்தியாக விளங்கியவர்.  

 மூன்று ஆண்டுகளாக 'கவின்' எனும் சஞ்சிகையை 'இது ஒரு சமூகத்தின் சஞ்சிகை' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக வெளியிட்டு கலை இலக்கிய சமூக பிரமுகர்கள் பலரையும் கவின் சஞ்சிகையில் பதிவு செய்துள்ளார். இவரது ஆயிரக்கணக்கான கவிதைகள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.    'குன்றம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் 'முகம்', 'மலைக்கண்ணாடி' ஆகிய சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். கடந்த பத்து ஆண்டு காலமாக சித்தர் வழிபாட்டில் ஈடுபட்டு வரும் பிறவிக் கவிஞர் கலா விஸ்வநாதன் எழுதிய 'சித்தர்அமிர்தம்' என்னும் காவியம் தற்போது தமிழகத்தில் நல்வழிப் பதிப்பகத்தில் அச்சில் உள்ளது.    

எச்.எச்.விக்கிரமசிங்க ...?


Add new comment

Or log in with...