விபத்தில் 2 பிள்ளைகளின் தாய் மரணம்

விபத்தில் 2 பிள்ளைகளின் தாய் மரணம்-Accident-Mother of 2 Children Died-Death-Kinniya

கிண்ணியா, உப்பாறு  பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிற்றூழியராக  கடமையாற்றி வரும் மூதூர், இறால் குழி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 42 வயதான ஜோதிமணி என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூரில்  இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குறித்த பெண், கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகில்  பயணித்துக் கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த பஸ் அவரை முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...