மரண தண்டணை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரும் நிரபராதிகள் என விடுதலை

- - "கொலை இடம்பெற்ற போது கையில் துப்பாக்கி இருந்தமைக்கான சாட்சியங்கள் இல்லை"

கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டணை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேளையில், வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில், பிரேமலால் ஜயசேகர, முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, காவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷண சில்வா ஆகிய மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் கடந்த வருடம் ஜூலை 31ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த தீர்ப்பை எதிர்த்து பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

அதற்கமைய, குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த, நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஆர். குருசிங்க ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணைகளுக்கு அமைய அவர்கள் நிரபராதிகள் என விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, சம்பவம் இடம்பெற்ற போது பிரதிவாதிகளின் கைகளில் துப்பாக்கிகளில் இருந்தமை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமையக்கான சாட்சியங்கள் இல்லை என்பதால் அவர்களை விடுவிப்பதாக அறிவித்துள்ளனர்.

2020 பாராளுமன்றத் தேர்தல்
கடந்த 2020 (ஓகஸ்ட் 05) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்த பிரேமலால் ஜயசேகர தேர்தல் வேளையில் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் பிரேமலால் ஜயசேகர 104,237 வாக்குகளைப் பெற்று தெரிவானதோடு மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தை பெற்றிருந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய தகுதியற்றவர் என, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா பாராளுமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தீர்ப்பு தொடர்பில் பிரேமலால் ஜயசேகர மேன்முறையீடு செய்திருந்ததால், பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு சம்பவம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 05.ஆம் திகதி காவத்தை நகரில்  அப்போதையை ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்தனர். குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர், 'தொடங்கொட சுசில் பெரேரா' என அழைக்கப்படும் ஷாந்த தொடங்கொட என்பவராவார். கே. கருணாதாஸ வீரசிங்க மற்றும் எம். இல்ஷான் என்பவர்களே இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனையவர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 31ஆம் திகதி, இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி, யொஹான் ஜயசூரியவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.


Add new comment

Or log in with...