எமது உடல் எடையை சீராக பேணுவதே ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படை

எமது வாழ்க்கைக் காலத்தில் நாம் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டிய ஒரு சொத்து ஆரோக்கியம் ஆகும். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அத்தியாவசியமான விடயம் ஒருவருக்குரிய ஆரோக்கியமான உடல் எடையாகும். ஆனால் தற்போதைய அவசர உலகிலே உடல் எடை அதிகரிப்பு என்பது பலராலும் கூறப்படக் கூடிய ஒரு பிரச்சினையாகும்.

அதிகரித்த உடல் எடை காரணமாக நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், கொலஸ்ட்ரோல், இருதய நோய், மூட்டுவலி போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரிப்பு பற்றி அறிந்து கொள்ளும் முன்பு ஆரோக்கியமான உடல் எடை தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கென உடற்திணிவு சுட்டி (LMI) பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு மனிதனின் உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடை இருக்க வேண்டும் என்பது மருத்துவ விதி.

பொதுவாக அதிகரித்த உடல் எடைக்கு உணவுப் பழக்கவழக்கம் மாத்திரமன்றி பல்வேறு காரணங்களும் பங்களிப்பு செலுத்துகின்றன. அக்காரணங்களை நோக்குவோமாயின், தவறான உணவுப்பழக்கம் பிரதானமானது.

உணவுப் பழக்கம் என்று கூறுமிடத்து தற்காலத்தில் மிகப்பெரும் பிரச்சினையாக அமைவது துரித உணவுகளுக்கு அடிமையாகும் தன்மையைக் குறிப்பிடலாம். துரித உணவுகளாக பிட்ஸா, சீஸ், ​ேபர்கர்,நூடில்ஸ், ப்ரைட் ரைஸ், மிக்சர், கேக், கொத்துரொட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் காரணமாக மேற்படி உணவுகளுக்கு அடிமையாகும் தன்மை ஏற்படுகின்றது. இவை மூளையிலுள்ள பாகங்களைத் தூண்டி போதைப்பொருள் போல அவற்றுக்கு அடிமையாகும் தன்மையை ஏற்படுத்தும். அத்துடன் ஒரு வேளையில் சாப்பிடக் கூடிய உணவின் அளவும் அதிகரிக்கும். இவ்வுணவுகள் அதிகளவு மாச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தைக் கொண்டிருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

இந்த உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமது ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை கவர்ச்சிகரமாகவும் ஆரோக்கியமானதாகவும் போலியான விளம்பரங்கள் மூலம் காட்சிப்படுத்தும் போது, மக்கள் அவற்றால் கவரப்படுகின்றனர். குறிப்பாக சிறுவயதினர் இவ்விளம்பரங்களால் கவரப்பட்டு துரித உணவுகளுக்கு அடிமையாவதால் சிறுவயதிலேயே நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் ஆரோக்கியமற்ற இளம் சமுதாயம் உருவாகி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

எமது நாளாந்த உணவு சமச்சீரான உணவாக இருக்க வேண்டும். சமச்சீரான உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்புச்சத்து, விற்றமின், கனியுப்பு ஆகியன சீரான அளவில் இருக்க வேண்டும். ஆனால் பொதுவான மக்களின் உணவில் மாப்பொருள் அதிகமாகவும் புரதம் குறைந்தளவிலும் இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.

புரதச்சத்து எமது உடலின் கட்டமைப்புக்கு மிகவும் அவசியம். இது கூடுதலாக உழுந்து கடலை, பருப்பு வகை, சோயா, பீன்ஸ், முட்டை, மீன், இறைச்சி, காளான் ஆகியவற்றில் அதிகளவாகக் காணப்படுகின்றது.

அடுத்து கொழுப்புச்சத்தை எடுத்துக் கொண்டால் இதுவும் எமது உடலின் தொழிற்பாட்டுக்கு மிகவும் அவசியம். ஆனால் அந்தக் கொழுப்பானது கெட்ட கொழுப்பாக அல்லாமல் நல்ல கொழுப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பெருமளவான மக்கள் உடல் எடை அதிகரித்துவிடும் என்ற பயத்தில் கொழுப்புச் சத்தைத் தவிர்த்து மாப்பொருள் உணவை அதிகமாக உள்ளெடுக்கின்றனர். ஆனால் இவ்வாறு எடுக்கப்படும் அதிகரித்த மாப்பொருளானது கொழுப்பாக மாறி உடலில் படிவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற உண்மையை மறந்து விடுகின்றார்கள்.

சிலர் எடைக்குறைப்பை தவறாக புரிந்து கொண்டு திடீரென உணவைத் தவிர்த்து விடுகின்றனர். இதனால் ஆரம்பத்தில் சடுதியாக எடை குறைந்தாலும் உடலுக்கு தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்காமல் உடற்பலவீனம், சோர்வு, களைப்பு, அன்றாட வேலைகளை சரியாக செய்ய முடியாத தன்மை, குடற்புண், மலச்சிக்கல் போன்ற நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உணவுக்கு அடுத்தபடியாக உடல் எடையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாளாந்த வாழ்க்கை முறையாகும். உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையான வாழ்க்கை முறை காரணமாகவும் ஒவ்வொருவரிலும் வெளியேற்றப்படும் கலோரி அளவு குறைவாக காணப்படுகிறது. உள்ளெடுக்கப்படும் கலோரிகளை விட வெளியேற்றப்படும் கலோரியின் அளவு குறைவதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

தைரொக்சின், இன்சுலின் ஹோர்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடை என்பது பரம்பரை அலகுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே அதிகரித்த உடல் எடையைக் கொண்ட குடும்பத்தவர்கள் முற்கூட்டியே அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிலரில் மனஅழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மை மற்றும் அதிகளவான பசி ஆகியவற்றால் உடல் எடை அதிகரிப்பதைக் காணலாம். மனஅழுத்தம், ஆஸ்துமா நோய் போன்ற நிலைகளில் பாவிக்கும் சில மருந்து வகைகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடல் எடையைக் குறைப்பதாயின் அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஆறு கோப்பை தண்ணீர் குடித்தல் அத்தியாவசியமாகும். உணவு உண்ண அரைமணித்தியாலத்திற்கு முன்னராக ஒரு கோப்பை தண்ணீர் அருந்துவதால் அதிக உணவை உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

எமது உணவில் நான்கில் ஒரு பகுதி மாப்பொருளாகவும், இன்னொரு பகுதி புரதமாகவும், மிகுதி அரைப்பங்கில் காய்கறிகளும் பழங்களும் உள்ளடங்கியிருக்க வேண்டும்.

மாச்சத்து மற்றும் சீனிச்சத்துக் கூடிய உணவுகளை இயலுமானவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உணவுக்கோப்பை அளவில் சிறியதாக இருக்க வேண்டும். உளவியல் ரீதியாக சிறிய தட்டில் சிறிதளவு உணவை நிரப்பினாலும் அதிகளவாக இருப்பது போல தோன்றுவதால் நாம் உள்ளெடுக்கும் உணவின் அளவு குறையும். அதிக ஆராய்ச்சி முடிவுகளில் இருந்து இது நிருபிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும். ஓவ்வொரு உணவு வேளைக்குமிடையில் குறைந்தது 4 மணி நேரம் இடைவெளி தேவை. ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் வரை எடுத்து ஆறுதலாக மென்று உண்ண வேண்டும். இவ்வாறு உண்ணும் போது மூளைக்கு போதும் என்ற செய்தி விரைவாக சென்றடைவதால் விரைவிலேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.

சாப்பிடும் போது தொலைக்காட்சி மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு உண்பதை தவிர்க்க வேண்டும். இப்படி சாப்பிடும் போது கவனம் இல்லாமல் அதிகளவு உணவை உட்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு உணவில் மட்டுமே கவனத்தை செலுத்தி உணவுண்ண வேண்டும்.

இவை தவிர உடல் எடையைக் குறைக்க உதவக்கூடிய உணவுகளை உள்ளெடுக்கலாம். உதாரணமாக, கொள்ளு- இதை குடிநீராக அவித்துக் குடிக்கலாம். மேலும் கொள்ளுத்துவையல் கொள்ளுரசம் போன்றவை உடல் எடையைக் குறைக்க உதவும்.

கறிவேப்பிலை- இதன் சாறு அல்லது பொடி எடை குறைப்பதில் பெருமளவு உதவுகின்றது. கறிவேப்பிலை சட்னி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கறுப்பு மிளகு, வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுப்பழக்கத்திற்கு அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது எமது உடலுக்கு தேவையான உடல் உழைப்பு. உடல் உழைப்பின் மூலமே உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும். இதை நாம் உடற்பயிற்சியாகவோ யோகாசனமாகவோ, நடைப்பயிற்சியாகவோ மேற்கொள்ள முடியும். தினமும் அரை தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரை உடற்பயிற்சி செய்து வர உடல் எடை கணிசமாக குறைவதைக் காணலாம்.

இயற்கை உணவை வரவேற்போம். அழகுக்காக மட்டுமின்றி ஆரோக்கியத்துக்காகவும் உடல் எடையைப் பராமரிப்போம்.

 

வைத்திய கலாநிதி  திருமதி மாதங்கி கௌரீஷன்...

ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர், இலவச சித்தமருந்தகம், அளவெட்டி.

வைத்திய கலாநிதி செல்வி வினோதா சண்முகராஜா...

சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.

கலாநிதி திருமதி கௌரி ராஜ்குமார்...

சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம், யாழ்ப்பாணம், பல்கலைக்கழகம்.


Add new comment

Or log in with...