முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகள்

இலங்கையில் போக்குவரத்துக்காக பஸ், ரயில் வண்டிகளுக்கு அப்பால் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாகனமாக முச்சக்கர வண்டிகள் விளங்குகின்றன. இதனை வீட்டுப் பாவனை வாகனமாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

போக்குவரத்து அமைச்சின் தரவுகளின்படி, இந்நாட்டில் சுமார் 12 இலட்சம் ஆட்டோ வண்டிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வீதிப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது இந்த முச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி அன்றாடம் வருமானம் ஈட்டிக் கொள்வதைப் பெரும்பாலானவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அதேநேரம் இவ்வண்டியைப் பயன்படுத்தி சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களும் உள்ளனர்.

ஆனால் சுமார் 12 இலட்சம் முச்சக்கர வண்டிகள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும், அவை தொடர்பில் கவனம் செலுத்தவும் அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கவும் இற்றைவரையும் தனியான கட்டமைப்பு இல்லாதுள்ளது. நாட்டில் பிரதேச மட்டத்திலுள்ள ஆட்டோ வண்டிச் சங்கங்களின் ஊடாகவே இவ்வண்டிகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. ஆனால் இவ்வாறான சங்கக் கட்டமைப்பை விடவும் பலமான கட்டமைப்பின் தேவை பரவலாக உணரப்பட்டிருக்கின்றது.

ஏனெனில் இந்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் நீண்ட காலமாகத் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஆட்டோ வண்டிகள் தொடர்பானவையாகும்.

அவற்றில் அதிக கட்டணம் அறவிடப்படுதல் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. அதேநேரம் அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றுதல், வீதிப் போக்குவரத்து சட்டங்களை மதிக்காமல் வாகனம் செலுத்துதல், போட்டியிட்டு வாகனத்தை வேகமாகச் செலுத்துதல், போதைப்பொருளைப் பாவித்த நிலையில் வாகனத்தை செலுத்துதல் போன்றவாறான குற்றச்சாட்டுக்களும் சுட்டிக்காட்டத்தக்கவை,

அத்தோடு சட்டவிரோதக் குற்றச்செயல்களான போதைப்பொருள் கடத்தல், விற்பனை, விநியோகம் என்பவற்றுக்கும் ஆட்கடத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் இந்த ஆட்டோ வண்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் நாட்டில் பதிவாகின்ற பெரும்பாலான வீதிவிபத்துகளுக்கு ஆட்டோ வண்டிகள் பங்களிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி நாட்டில் அதிக குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுககும் உள்ளாகியுள்ள ஒரு வாகனமாகவே ஆட்டோ வண்டிகள் விளங்குகின்றன. இவ்வாறு இவ்வண்டிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றில் பிரதான புகாராக ஒவ்வொரு ஆட்டோ வண்டியும் வெவ்வேறு மட்டத்தில் கட்டணத்தை அதிகரித்து அறவிடப்படுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையில் இக்குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் ஆட்டோ வண்டிகளுக்கு மீற்றர்களை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் விஷேட வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டது.

ஆனாலும் மீற்றருக்கு செலவு அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, 'ஆட்டோ முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கையைக் கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக முச்சக்கர வண்டி பயணத்தின் போது அறவிடப்படும் பயணக் கட்டணம் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். தம் விருப்பப்படி கட்டணம் அறவீடும் முறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என எதிர்பாரக்கப்படுகிறது. மக்கள் வரவேற்கும் நடவடிக்கையாக இது அமையும். இதேபோன்று முச்சக்கர வண்டிகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் ஏனைய விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் குறித்தும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுவும் மக்களின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக இந்நாட்டின் ஆட்டோ வண்டிகளை ஒழுங்குமுறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டு வரக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சிறந்த ஒழுங்கு முறையான சேவையை வழங்கும் வாகனமாக ஆட்டோ முச்சக்கர வண்டி விளங்கும்.


Add new comment

Or log in with...