ரஞ்சனுக்கு எதிரான 2ஆவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 25 இற்கு ஒத்திவைப்பு

ரஞ்சனுக்கு எதிரான 2ஆவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 25 இற்கு ஒத்திவைப்பு-Ranjan Ramanayake 2nd Condemn of Court Adjourned Till March 25

- திரைப்பட வெளியீடு தொடர்பில் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று (09) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இது அறிவிக்கப்பட்டது.

இதன்போது, ​​சிறைச்சாலை அதிகாரிகளால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

அப்போது ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட, இவ்வழக்கின் அடிப்படையிலான கருத்து தொடர்பில் திறந்த நீதிமன்றில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதற்கு தமது கட்சிக்காரர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

குறித்த கருத்தின் மூலம் நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என தமது கட்சிக்காரர் தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி மெத்தேகொட, இது தொடர்பில் கருத்துகளை முன்வைக்க தினமொன்றை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி நீதிமன்றில் கருத்துகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தனது கட்சிக்காரர் இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகும் திரைப்படத்தின் முதல் காட்சி எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறுவதாகவும், அதில் அவரை கலந்துகொள்வதற்கு அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான தனது முடிவை அறிவித்த பிரதம நீதியரசர், தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை என்பதால் அவ்வாறானதொரு உத்தரவை தமது நீதிமன்றத்தினால் பிறப்பிக்க முடியாது எனவும், பிரதிவாதி சிறைச்சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தைக் கலைத்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரிய அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என உயர் நீதிமன்ற பதிவாளரினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...