இலங்கையுடனான 20க்கு 20 தொடர்: இந்திய அணி 3-0 என வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான மூன்றாவது 20க்கு20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரிலும் இலங்கை வீரர்களை 3-–0 என வைட்வொஷ் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தரம்சலாவில் ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரான தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரை 2-0 என ஏற்கனவே பறிகொடுத்திருந்த நிலையில், இப்போட்டியில் ஆறுதல் வெற்றியொன்றினை எதிர்பார்த்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி ஜெப்ரி வன்டர்சே மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் கமில் மிஷார, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோருக்குப் பதிலாக இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் இந்திய அணி நான்கு வீரர்களை தமது குழாத்திற்குள் இணைத்திருந்தது. மாற்றங்கள் மூலம் அணிக்குள் உள்ளான அந்த நான்கு வீரர்களாக ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான், மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் மாறியிருந்தனர்.

பின்னர் நாணயச் சுழற்சி முடிவுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களாக களம் வந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய இருவரும் ஏமாற்றம் தந்திருந்தனர். இதில் குணத்திலக்க ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்து மற்றுமொரு மோசமான இன்னிங்ஸை இந்த தொடரில் வெளிப்படுத்த, பெதும் நிஸ்ஸங்க ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் புதிய வீரர்களாக களம் வந்த சரித் அசலன்க (4) மற்றும் ஜனித் லியனகே (9) ஆகியோர் குறுகிய நேரத்தில் தமது விக்கெட்டுக்களை பறிகொடுக்க, தினேஷ் சந்திமாலும் பெரிதாக சோபிக்காமல் 27 பந்துகளுக்கு வெறும் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சந்திமாலின் விக்கெட்டின் பின்னர் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இலங்கை அணியினை கடந்த போட்டி போன்று அணித்தலைவர் தசுன் ஷானக்க மீட்டெடுத்ததுடன் ஆறாம் விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் சாமிக்க கருணாரட்வுடன் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து இந்த இணைப்பாட்ட உதவியுடன் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த தசுன் ஷானக்க தன்னுடைய மூன்றாவது அரைச்சதத்துடன் தனது சிறந்த 20க்கு20 இன்னிங்ஸையும் வெளிப்படுத்தி 38 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க ரவி பிஸ்னோய், ஹர்சால் படேல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

அதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 147 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் அதன் தலைவர் ரோஹிட் சர்மாவின் விக்கெட்டினைப் பறிகொடுத்திருந்தது. ரோஹிட் சர்மா 5 ஓட்டங்களுடன் துஷ்மன்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்

தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இந்திய அணி ஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடித் துடுப்பாட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் அய்யர், இந்த தொடரில் தன்னுடைய தொடர்ச்சியான மூன்றாவது அரைச்சதத்துடன் 45 பந்துகளுக்கு 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், சாமிக கருணாரட்ன மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டிய போதும் அது வீணானது.

இலங்கை அணி தமது இந்திய சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற 20க்கு20 தொடரினை முழுமையாக பறிகொடுத்த நிலையில், அடுத்ததாக எதிர்வரும் 04ஆம் திகதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.


Add new comment

Or log in with...