ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கத்துடன் இரு இந்தியர்கள் கைது

ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கத்துடன் இரு இந்தியர்கள் கைது-Gold Smuggling-3 Indian Nationals Arrested

- துபாயிலிருந்து வந்த இந்தியரினால் மற்றொரு இந்தியரிடம் கைமாற்றம்
- குத வழியில் வைத்து கடத்த கழிப்பறை சென்ற நிலையில் கைது

நேற்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 1.29 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 43 வயதுடைய இந்திய நாட்டு பிரஜைகைகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய கண்காணிப்பு நடவடிக்கையில் இருந்த அதிகாரிகளால் விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்தில் பயணி ஒருவர் மிக நீண்ட நேரமாக கழிப்பறையில் இருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டபோது, குறித்த நபரிடமிருந்து இவ்வாறு குறித்த தங்க உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தங்கமானது, 430 கிராம் கொண்ட 3 உருண்டைகளாக இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன

28 வயதான குறித்த இந்திய நாட்டவர் நேற்றைய தினம் (28) அதிகாலை சென்னை நோக்கி செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்தவர் என்பதோடு, குறித்த ஜெல் கொண்ட உருண்டைகளை குத வழியில் மறைத்து வைத்து, ஒட்டக்கூடிய பட்டி ஒன்றினால் ஒட்டி கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (28) அதிகாலை துபாயலிருந்து வந்த 43 வயதான மற்றுமொரு இந்திய நாட்டவரினால் குறித்த தங்க உருண்டைகள் மேற்படி சந்தேகநபரிடம் வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதற்மைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களுடன் வழக்குப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 


Add new comment

Or log in with...