11,463 ரஷ்யர்கள், 3,993 உக்ரைனியர்களின் வீசா கட்டணமின்றி நீடிப்பு

11,463 ரஷ்யர்கள், 3,993 உக்ரைனியர்களின் வீசா கட்டணமின்றி நீடிப்பு-6 Cabinet Decisions-Feb 28

- இவ்வார அமைச்சரவையில் 6 தீர்மானங்கள்

நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடித்க்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் 11,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தற்போது தங்கியிருக்கின்றனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளால் அவர்களுக்கு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் தோன்றியுள்ளன.

அதனால், நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசாவுக்கான காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி 2 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. சிறுபோக நெற் செய்கைக்கான மியூறேட் ஒஃப் பொட்டாஸ் (பொட்டாசியம் குளோரைட்) உர இறக்குமதி
மியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் பசளை வகையாவதுடன், விவசாயிகள் நெற்செய்கைக்கான குடலைப்பருவப் பசளை எனவும் அதனை பயன்படுத்தப்படுத்துகின்றனர்.

2022 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் விவசாயிகள் 06 இலட்சம் ஹெக்ரெயார்கள் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், அதற்காக 38,500 மெற்றிக்தொன் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் பசளை தேவையெனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி பொறிமுறையைப் பின்பற்றி குறித்த பசளையை இறக்குமதி செய்வதற்கும், அரசாங்கத்தின் உரமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இப்பசளையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார் பங்குடமை பொறிமுறையின் கீழ் மீண்டும் ஆரம்பித்தல்
வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு சொந்தமான எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடங்களை 30 வருட காலப்பகுதிக்கு உள்;ர் முதலீட்டுக் கம்பனியான கொரியன் ஸ்பா பெக்கேஜ் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த காணியை முறையான வகையில் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையால் குறித்த அமைச்சரவை தீர்மானத்திற்கமைய செயற்படுவதற்கு இயலுமை கிட்டவில்லை.

அத்தொழிற்சாலை அமைந்துள்ள 111 ஏக்கர்கள் 02 றூட் 33 பேர்ச்சர்ஸ் காணியை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி மற்றும் கொரியன் ஸ்பா பெக்கேஜ் கம்பனிக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்ட பின்னர், எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார் பங்குடமை பொறிமுறையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2021/2022 பெரும்போகத்தில் பசுமை விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்தியமைக்கான மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்தும் பொறிமுறை
2021/022 பெரும்போகத்தில் நெல் விளைச்சல் குறைவால் பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 வீதம் நட்டஈட்டை வழங்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை திறைசேரியுடன் கலந்துரையாடி தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு கணிப்பீடு செய்யப்படும் நட்ட ஈட்டுத்தொகை, மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக உயர்ந்தபட்சம் 5 ஏக்கர்களுக்கு வழங்குவதற்கும், சார்பு நிலையிலுள்ள  சிறியளவிலான விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளுக்கும் ஏற்புடைய வகையிலான மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான நிதியை, சேதன உர உற்பத்தி மற்றும் விநியோகங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் தானியங்கள், இயற்கை வேளாண் உணவு, மரக்கறி, பழவகை, மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடல் ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சின் மூலம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடல் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சக்தி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் கருத்திட்டம் - 04 ஆவது பக்கேஜ்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடல் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சக்தி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் கருத்திட்டம் - 04 ஆவது பக்கேஜ் இன் கீழ் பரிமாற்றல் வழிகள் மற்றும் பகுதிகளைத் திட்டமிடல், விநியோகம் மற்றும் நிறுவுதல் போன்றவற்றுக்கான சர்வதேச விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழு குறித்த ஒப்பந்தத்தை சைனா மெஷினரி இன்ஜினியரிங்க் கோபரேஷன் இற்கு வழங்குவதற்குப் பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்தல்
2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...