3rd T20; SLvAUS: ஆரம்ப வரிசையைப் பலப்படுத்தி தொடரை தக்கவைக்க இலங்கை முயற்சி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி–20 போட்டி கென்பராவில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் 0–2 என பின்தங்கி இருக்கும் இலங்கை தொடர் தோல்வியை தவிர்க்க வேண்டுமானால் ஏஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியமாகும்.

குறிப்பாக இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்கவின் உதவி கிடைத்தால் இலங்கை அணிக்கு நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முடியும். நிசங்க முதல் போட்டியில் 36 ஓட்டங்களை பெற்றதோடு இரண்டாவது ஆட்டத்தில் 53 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 73 ஓட்டங்களை விளாசினார்.

இதுவரை நடந்த போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் பலவீனத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. முதல் போட்டியில் மிட்சல் ஸ்டாக் தனது நான்கு ஓவர்களுக்கும் 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். அவருக்கு பதில் சேர்க்கப்பட்ட கேன் ரிச்சட்சன் இரண்டாவது போட்டியில் தனது நான்கு ஓவர்களுக்கும் 41 ஓட்டங்களை கொடுத்தார்.

இரு போட்டிகளிலும் அரம்பத்தில் வேகமாக ஓட்டங்கள் பெற்றபோதும் மத்திய வரிசை தடுமாற்றம் கண்டது. ஸ்டீவன் ஸ்மித் உபாதை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி இருப்பது மத்திய வரிசையில் மாற்றத்தை கொண்டுவர வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறந்த முறையில் பந்துவீசியதோடு களத்தடுப்பிலும் ஈடுபட்டபோதும் ஜோஷ் ஹேசல்வுட் இலங்கை ஆரம்ப வரிசைக்கு நெருக்கடி கொடுத்தார். நிசங்க அபாரமாக துடுப்பெடுத்தாடியபோதும் மறுமுனையின் முதல் நால்வரும் வேகமாக ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்ததைத் தான் காண முடிந்தது.

இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி பிடியெடுப்பதில் பலவீனத்தை காட்டியதோடு கிளன் மெக்ஸ்வெல் இரண்டு பிடியெடுப்புகளை தவறவிட்டார். இலங்கை அணி தொடரில் பல ரன் அவுட் வாய்ப்புகளையும் தவறவிட்டது.

அரோன் பின்ச் அவுஸ்திரேலிய டி–20 அணியின் சிறந்த தலைவராக இருந்தபோதும் அவரது துடுப்பாட்டம் சோபை இழந்து காணப்படுகிறது. அவர் கடைசியாக ஆடிய 14 டி–20 சர்வதேச போட்டிகளில் ஒரே ஒரு அரைச்சதம் மாத்திரம் பெற்றிருப்பதோடு ஏழு முறை ஒற்றை இலக்கங்களையே பெற்றிருக்கிறார். எனவே, தனது ஆட்டத்தை மேம்படுத்தும் முயற்சியில் இன்று அவர் ஈடுபட போராடுவார்.

சரித் அசலங்க முதல் முறை அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டியில் அவரது ஆட்டத்தை விமர்சித்துக் கூறுவது நியாயமாக இருக்காது. என்றாலும் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெல்ல வேண்டுமானால் அவர் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்புவது அவசியமாகும். அவர் நடந்த டி–20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆபார ஆட்டத்தை வெளிக்காட்டி இருந்தார்.

என்றாலும் பந்து அதிகம் துள்ளும் மற்றும் வேகம் பெறும் அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் அவருக்கு சவாலாகவே உள்ளன. ஹேசில்வுட் மற்றும் பட் கம்மின்ஸ் வீசிய பெரும்பாலான பந்துகள் அவரது மட்டையின் மேற்பாகத்திலேயே பட்டது. எனவே ஆடுகளத்தில் இரு முனைகளுக்கு இடையே மாறி ஓட்டங்களை பெறுவது மாத்திரம் இன்றி பந்தை பௌண்டரிக்கு செலுத்தி அதிரடியாக ஆடுவதற்கான வழியையும் அவர் கண்டறிய வேண்டும்.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா இரண்டு மாற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்மித்துக்கு பதில் மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டி இருப்பதோடு ஹேசில்வுட் அல்லது கம்மின்ஸுக்கு ஒய்வு வழங்க வாய்ப்பு உள்ளது. மொயிசஸ் அஹன்ரிக்ஸ் பெரும்பாலும் ஸ்மித்துக்கு பதில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஸ்டார்கிற்கு முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர் அண்மைக்காலத்தில் சோபிக்கத் தவறி வருகிறார். அணியில் மாற்றம் ஒன்றை விரும்பினால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜை ரிச்சட்சனை இன்றைய போட்டியில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்கவுக்கு பதில் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இலங்கை அணியில் வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இல்லை. முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பினுர பெர்னாண்டோ கொரானா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு இல்லை.

இன்றைய போட்டி நடைபெறும் கென்பராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இதுவரை இரண்டு டி–20 சர்வதேச போட்டிகளே இடம்பெற்றுள்ளன. உள்ளுர் போட்டிகளில் இந்த மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தபோதும் சர்வதேச போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்டதில்லை. போட்டி நடைபெறுவதற்கு சாதகமான காலநிலையே அங்கு நிலவி வருகிறது.

இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய எட்டு சர்வதேச போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இதில் ஆறு டி–20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கும். அந்த அணிக்கு எதிராக இலங்கை கடைசியாக 2017 ஆம் ஆண்டு கீலோங்கில் இடம்பெற்ற டி–20 போட்டியிலேயே இலங்கை அணி வெற்றியீட்டியது.


Add new comment

Or log in with...