IPL 2022: வணிந்து ஹசரங்க 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம்

IPL 2022: வணிந்து ஹசரங்க 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம்-Wanindu Hasaranga Sold out for INR 10.75 Crore

- பஞ்சாப் உடன் போட்டியிட்டு கொள்வனவு செய்தது பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி
- ஆரம்ப தொகையாக ரூ. 1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது
- இலங்கை வீரர் ஒருவர் IPL இல் ஏலம் போன அதிகூடிய தொகை

இந்திய ப்ரீமியர் லீக் 2022 இற்கான வீரர்களை கொள்வனவு செய்யும் மாபெரும் ஏலத்தில் (Mega Auction) இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க, ரூ. 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு (1.43 மில்லியன் டொலர்) (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 30 கோடிக்கு) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இன்று (12) பெங்களூரில் இடம்பெற்ற இந்த ஏலத்தில், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியே வணிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆரம்ப விலையாக ரூ. 1 கோடி என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த வணிந்து ஹசரங்கவை, பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் தங்கள் அணிகளில் இணைக்க முயற்சி செய்து நிலையில், இறுதியில் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

அந்த வகையில், இலங்கை அணி வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அதிகூடிய தொகையாக இது பதிவாகியுள்ளது.

இலங்கை அணி வீரரான வணிந்து ஹசரங்க, அடம் சம்பாவிற்கு பதிலாக, துபாயில் இடம்பெற்ற IPL 2021 இன் இரண்டாம் பாகத்தில் RCB இல் இணைந்தார்.

24 வயதான சகலதுறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்க பந்துவீச்சில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கடந்த வருடம் ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரின் போது, ​​இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 4 விக்கெட்டுகளுக்கு 9 ஓட்டங்கள் எனும் பெறுதியுடன் 3 ரி20 போட்டிகளில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் இலங்கை அணி 2 - 1 என தொடரை கைப்பற்றியிருந்ததுடன், தொடரின் நாயகனாக ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ICC பந்துவீச்சு தரவரிசையில் முன்னேறிய அவர், அந்தத் தொடரின் முடிவில், ரி20 பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஹசரங்க கடந்த வருடம் இடம்பெற்ற ரி20 உலகக் கிண்ணத் தொடரில் ஹெட்ரிக் விக்கெட் சாதனையையும் பதிவு செய்திருந்தார். 8 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக தனது பெயரை பதிவு செய்திருந்தார்.


Add new comment

Or log in with...