இலங்கை-அவுஸ்திரேலிய ரி20 தொடர் சிட்னியில் இன்று ஆரம்பம்

இலங்கை- அவுஸ்திரேலியாவுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ரி/20 போட்டித் தொடர் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இரு அணிகளும் 2019ஆம் ஆண்டு கடைசியாக அவுஸ்திரேலியாவில் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3- 0 என்ற ரீதியில் இலங்கை அணி தோல்வியுற்றது. உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணி அப்போதைய அணியைவிட பலமான அணியாக இன்று இலங்கை அணியைச் சந்திக்கிறது. உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றதன் பின் முதன் முதலாக அவ்வணி ரி/20 தொடரொன்றில் மோதவுள்ளதால் இலங்கை அணி கடுமையான சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

உலகக் கிண்ணத் தொடரின் போது மிகச் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இத் தொடரிலும் தமது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியும்.

அவுஸ்திரேலியாவில் அண்மையில் முடிவுற்ற பிக்பாஷ் தொடரின் போது அவஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டத்தை நோக்கும் போது அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு இலகுவாக முகம் கொடுத்து ஓட்டங்களைச் சேர்த்தனர். அத் தொடரில அநேகப் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே அவர்கள் தடுமாறியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இங்கு நமது சுழற்பந்து விச்சாளர்களான வனிந்து ஹசரங்க, மகீஷ் தீக்ஸன சிறப்பாக செயற்படுவார்களானால் தொடர் இலங்கை அணிக்கு சார்பாக முடியும். முதல் இரண்டு போட்டிகளும் சிட்னி மைதானத்தில் நடைபெறுவதால் இது சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் மைதானமாகும். இங்கு 2013ம் ஆண்டு நடைபெற்ற ஒரே போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. மேலும் இம்மைதானத்தில் நடைபெற்ற பிக்பாஸ் தொடரில் ரஷீத்கான், ஸ்டீவ் ஓக்கிப் போன்ற சுழற்பந்து விச்சாளர்களே திறமையாக பந்து வீசியுள்ளனர். எனவே இம்மைதானத்தில் நடைபெறவுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியிலாவது இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடித்தர முயன்றால் தொடரின் முடிவுகள் இலங்கைக்கு சாதகமாக அமையும்.

தொடரின் மூன்றாவது போட்டி கென்பராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்மைதானமும் சுழற்பந்து வீச்சுக்கும், மிதமான வேகப்பந்து வீச்சுக்கும் கைகொடுக்கும் மைதானமாகும். எமது மிதமான வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான சாமிக கருணாரத்ன இறுதி நேரத்தில் கொவிட்19 தொற்றுக்குள்ளானதால் இத் தொடரிலிருந்து விலகியது இலங்கை அணிக்கு பாதகமாகும். இப்போட்டியில் சாமிக்க கருணாரத்னவுக்கு பதிலாக அழைக்கப்பட்டுள்ள மற்றொரு மிதவேக பந்துவிச்சாளரான பினுர பெர்னாந்துவின் பந்து வீச்சு இம்மைதானத்தில் சாதகமான பெறுபேற்றைப் பெற்றுத் தருமென எதிர்பார்க்கலாம். கடைசி இரு போட்டிகளும் 18ம் 20ம் திகதிகளில் மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்மைதானத்தில் இலங்கை இதுவரை 3 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் இரு போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றுள்ளதால் இம்முறையும் இம்மைதானத்தில் இலங்கை சாதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இம்மைதானத்தில் 2019 நடைபெற்ற போட்டியில் வோனரின் அதிரடியாட்டத்தில் இலங்கை தோல்வியுற்றது. ஆனால் இம்முறை இத் தொடருக்கு வோனருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு சற்று ஆறுதலான விடயமே.

ஆனால் இத் தொடரில் இலங்கை அணி கிளேன் மெக்ஸ்வல் மீது கூடிய கவனம் செலுத்தி அவரை விரைவாக வெளியேற்ற வேண்டும். இலங்கை அணியின் பந்து வீச்சை இலகுவாக சிக்சர், பௌண்டரி என விரட்டக்கூடியவர் இவரே. மேலும் இலங்கை அணிக்கு எதிராகவே இவர் அதிகளவான போட்டியில் அதிரடியாக விளாசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பிக்பாஷ் தொடரிலும் மெல்பெர்ன் மைதானத்தில் மெக்ஸ்வெல் நான்கு போட்டிகளில் 102, 37, 154, 68 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். எனவே இங்கு நடைபெறும் போட்டிகளில் இவரை விரைவாக ஆட்டமிழக்கச் செய்தால் இலங்கை அணிக்கு சாதகமாக அமையும். ஏனெனில் பிக்பாஷ் தொடரில் மற்றைய மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் அவர் 10 ஓட்டங்களைக் கூடத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்கஸ் ஸ்டொயின்ஸும் சகலதுறை ஆட்டம் மூலம் தற்போது வழமையான திறமையை வெளிக்காட்டிவருகிறார்.

அவர்களது பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சு பலமாகவே உள்ளது. மிச்சல் ஸ்டாக், பெட்கமின்ஸ், ஹேசல்வூட் அவுஸ்திரேலிய மைதானங்களில் சிறப்கபாகவே பந்து வீசவார்கள் என எதிர்பார்க்கலாம். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அடம் சம்பா கடந்த காலங்களில் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார். அண்மையில் முடிவுற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் அவரின் பங்களிப்பு சிறப்பாகவே இதுந்தது. பிக்பாஷ் தொடரிலும் அவர் தனது திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார். எனவே எமது துடுப்பாட்ட வீரர்கள் இவரது பந்து வீச்சில் கூடிய கவனம் செலுத்தி ஓட்டங்களைச் சேர்க்க வேண்டும்.

ஸ்டீவ் சுமித்தும் இம்முறை ரி/20 தொடரில் விளையாடவுள்ளார். இவரின் அனுபம் இலங்கையுடனான துடுப்பாட்டத்தில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வோர்னரின் இடத்துக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இம்முறை பிக்பாஷ் தொடரில் அதிரடியாக ஆடிய மெக்டமட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்துக்குப் பின் இலங்கை அணியின் இளம் வீரர்களான சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, அவிஷ்க பெர்னாந்து, பெத்தும் நிஷ்சங்க ஆகியோர் அவுஸ்திரேலிய தொடரில் கூடிய பங்களிப்பை எதிர்பார்க்கக் கூடிய வீரர்களாவர்.

அவுஸ்திரேலிய மைதானத்தில் அவிஷ்க பெர்னாந்துவும், தனுஷ்க குணதிலக்கவும் சிறப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த எல். பி. எல். தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட வீரர்களாவர். தனுஷ்க குணதிலக்க பகுதி நேர பந்து வீச்சாளராக இருப்பதால் அவரது பந்து வீச்சும் இத்தொடரில் இலங்கை அணிக்கு கைகொடுக்கலாம். பெத்தும், தனுஷ்க, அசலங்க, அவிஷ்க, சந்திமால், மெண்டிஸ், தசுன், வனிந்து, சமீர, பினுர, மகேஷ் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளனர். கொவிட் தொற்றுக்கு இலக்கான சாமிக கருணாரத்ன விலகியுள்ளார். குசல் மெண்டிசும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் முதல் போட்டியில் இவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் எமது வீரர் துஷ்மந்த சமீர சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தால். இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் தலைவர் தசுன் சானகவும் பந்து வீச, மேலுமொரு சுழற்பந்து வீச்சாளரான ரமேஷ் மெண்டிஸ் விளையாட வாய்ப்புள்ளது. இவர் துடுப்பாட்டத்திலும் பங்களிக்கக்கூடியவர் என்பதால் துடுப்பாட்ட வரிசையைப் மட்டுமாவது பலப்படுத்த இது உதவும் எனக் கூறப்படுகிறது. முதல் போட்டி சிட்னியில் நடைபெறுவதால் அந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாகமாகவுள்ளது. எனவே ரி/20 சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள வனிந்து ஹசரங்க இந்த முதல் போட்டியிலேயே தமது அணிக்கு முழுப்பங்களிப்பையும் அளித்து அப்போட்டியில் வெற்றிபெற்றால் முதலிலேயே அவுஸ்திரேலிய அணியை மனதளவில் பலமிழக்கச் செய்யலாம். அது இத்தொடர் முழுவதும் இலங்கை அணியின் கையோங்க சிறந்த சந்தர்ப்பமாக அமையும். போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி மதியம் 1.40 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டி அட்டவணை

1வது போட்டி 11.02.2022 சிட்னி மைதானம்

2வது போட்டி 13.02.2022 சிட்னி மைதானம்

3வது போட்டி 15.02.2022 கென்பரா மைதானம்

4வது போட்டி 18.02.2022 மெல்பேர்ன் மைதானம்

5வது போட்டி 20.02.2022 மெல்பேர்ன் மைதானம்


Add new comment

Or log in with...