2016 இராஜகிரிய வாகன விபத்து தொடர்பில் சம்பிக்க ரணவக எம்.பிக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஒரு சில காரணங்களை முன்வைத்து, அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட குறித்த அடிப்படை ஆட்சேபணையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிப்பதாக, நீதவான் அறிவித்தார்.
குறித்த தினத்தில் சாட்சியாளர்கள், பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கான உத்தரவையும் நீதவான் இதன்போது விடுத்தார்.
சம்பிக்க ரணவக மற்று அவரது சாரதியான துசித குமார, வெலிக்கடை பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிரிய பகுதியில், WP KP 4575 எனும் ஜீப் வண்டியை பாதுகாப்பாற்ற முறையில் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, இளைஞர் ஒருவரை காயப்படுத்தி விட்டு, தப்பிச் சென்றமை அது தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
Add new comment