58 வயது பெண் கொலை சம்பவம்; சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்

பதுளைப் பகுதியின் தெபத்தை பெருந்தோட்டப் பிரிவில் மரணமான பெண், பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு, கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக, பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ருவீர நதீர குறிப்பிட்டார். அவர் இது குறித்த அறிக்கையை, பதுளை நீதவான் நீதிபதியிடமும் ஒப்படைத்துள்ளார்.

பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி மேற்படி சடலம் குறித்து சட்ட வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் முகமாக சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தை சமர்ப்பிக்கும்படி பதுளைப் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டதற்கமையவே சட்ட வைத்திய அதிகாரி மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

தெபத்தை பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 58 வயது நிரம்பிய லெட்சுமணன் சந்திரலேகா என்ற  இரு பிள்ளைகளின் தாயே பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு, கோரமாகக் கொலை செய்யப்பட்டவராவார். இக்கொலை கடந்த 24 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், இம் மரணம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பொலிஸ் மோப்ப நாயும் ஸ்தலத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மீட்கப்பட்ட சடலத்தருகே கிடந்த, இறந்த பெண்ணின் பாதணிகளை மோப்பநாய் மோப்பம் பிடித்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று, அதே தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரை கௌவிப் பிடித்தது. மோப்ப நாயுடன் சென்ற பொலிஸார் குறிப்பிட்ட நபரைக் கைது செய்தனர்.

அந்நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது, தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த  நபர் இரு பிள்ளைகளுக்குத் தகப்பன் என்று தெரியவந்துள்ளது. அந்நபர் வழங்கிய வாக்குமூலத்தினடிப்படையில், அந்நபரின் குடியிருப்பை சோதனையிட்ட போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த நிலையிலான நீண்டகாற்சட்டைய, டீ சேர்ட் ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

இக் கொலை குறித்து, பதுளைப் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட நபருடன் தொடர்புபட்டவர்கள் குறித்தும் புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

கொலையுண்ட பெண், பதுளை மாநகரில் வயோதிப தாயொருவரை பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வழமைபோல் இத் தொழிலுக்கு வந்து வீடு செல்லும் போதே, இப் பெண்ணிற்கு மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவத்தையடுத்து, பதுளைப்பகுதியின் தெபத்தை தோட்டப் பிரிவு மக்கள் மத்தியில் பெரும் பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

(பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)  


Add new comment

Or log in with...