ஊவா மாகாண அணி வெற்றி

மாகாணங்களுக்கிடையிலான சுதந்திரக்கிண்ணம் உதைபந்தாட்ட தொடர்:

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்து லீக் சுற்றுத் தொடரின் முதல் வெற்றியை ஊவா மாகாண அணி பதிவு செய்துள்ளது.

சுற்றுத் தொடரின் ஆரம்பப் போட்டி நேற்றுமுன்தினம் (25) மாலை குருனாகலை மாலிகாபிடிய அரங்கத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் கிழக்கு மற்றும் மத்திய மாகாண அணிகள் மோதின.

பின்னர் இரவு இடம்பெற்ற தொடருக்கான ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் சொந்த மைதான அணியான ரஜரட்ட மற்றும் ஊாவா மாகாண அணிகள் மோதின.

கிழக்கு எதிர் மத்தி

இவ்விரு அணிகளும் போட்டியின் ஆரம்பம் முதல் சம பலத்துடன் மோதிக் கொண்டன. எனினும், இரண்டு பாதிகளிலும் எந்த அணி வீரர்களாலும் கோல்கள் பெறப்படாமையினால் ஆட்டம் கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவுற்றது.

கிழக்கு மாகாண அணி தமது அடுத்த போட்டியில் ரஜரடட்ட அணியையும் மத்திய மாகாண அணி அடுத்த போட்டியில் மேல் மாகாண அணியையும் எதிர்கொள்ளவுள்ளன.

ரஜரட்ட எதிர் ஊவா

ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் மின்னொளியின் கீழ் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஊவா அணிக்கு எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் வைத்து கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை 19 வயதின்கீழ் வீரர் பிராஸ் ஸஹீர் பெற்றார். தடுப்புக்களுக்கு மத்தியில் கோலின் இடது பக்கத்தினால் பந்தை செலுத்திய பிராஸ் போட்டியினதும் தொடரினதும் முதல் கோலைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் போட்டியின் முழு நேரம் முடியும் வரையில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் ஊவா மாகாண அணி 1-–0 என்ற கோல்கள் கணக்கில் ரஜரட அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பம் செய்தது.

ஊவா மாகாண அணி தமது அடுத்த போட்டியில் வட மாகாணத்திற்கு எதிராக விளையாடவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் விளையாட்டுக் கொள்கைகளுக்கிணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான சுதந்திரக்கிண்ணம் உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டி கடந்த 25ம் திகதி குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதல் தடவையாக மாகாணங்களுக்கிடையில் இப்போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் முதல் போட்டி கடந்த 25ம் திகதி கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான போட்டி மாளிகாபிட்டிய மைதானத்தில் நடைபெற்றது.

உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் ஒருங்கிணைப்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமிய பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு மாகாணங்களின் அணிகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்கின்றன.

வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் ஒரே ஆணியாக விளையாடி வருவதுடன் ரஜரட்ட உதைபந்தாட்ட அணி என பெயரிடப்பட்டு தலைமைப் பயிற்சியாளராக ராஜமணி தேவசகாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வணியுடனான முதல் போட்டி குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் கடந்த 25ம் திகதி இரவு நடைபெற்றது. இதில் எம். எம்.எம். ஹம்சா பிரதான பயிற்சிவிப்பாளராகக் கடமையாற்றும் ஊவா மாகாண அணியுடன் மோதியது.

நேற்று 26ம் திகதி நடைபெற்ற போட்டியில் மாலை 3 மணிக்கு ரத்னம் ஜெஸ்மின் பிரதான பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றும் வட மாகாணமும் எம். எம். ரகுமான் பயிற்சியாளராகக் கடமையாற்றும் சப்ரகமுவ மாகாணமும் களத்தில் இறங்கியது. நேற்றுமுன்தினம் மாலை 7.30க்கு மின்னொளியில் நடைபெற்ற போட்டியில் சுமித் வல்பொலவின் பயிற்சியின் கீழ் மேல்மாகாண அணியும், ஸ்ரீரத்னகுமார பயிற்சியாளராகக் கடமையாற்றும் தென் மாகாணமும் மோதின.

இநத எட்டு மாகாணங்களும் போட்டியிடும் அணிகளில் அந்தந்தப் பிரதேசத்தில் விளையாடும் தேசிய அணி வீரர்கள் கட்டாயமாக விளையாட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரர்களுக்கும் அவர்கள் இருக்கும் பிரதேசங்களில் உள்ள அணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை மாகாண உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டி எட்டு மாகாணங்களில் நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது கட்ட மாகாணப் போட்டி எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் யாழ். மாவட்டத்தின் துரையப்பா மைதானத்திலும், அரியாலை மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

மூன்றாம் கட்டம் திருகோணமலை மைதானத்திலும், மட்டக்களப்பு வெபர் மைதானத்திலும் எதிர்வரும் பெப்பரவரி மாதம் 2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. உதைபந்தாட்டத் தொடரின் நான்காவது கட்டம் பெப்ரவரி மாதம் 6ம் 7ம் திகதிகளில் பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெறும். 5ம் கட்டப் போட்டிகள் அடுத்த மாதம் 10ம், 11ம் திகதிகளில் கண்டி போகம்பர மைதானம் மற்றும் நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்திலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

ஆறாவது கட்டப் போட்டிகள் அடுத்த மாதம் 14ம் 15ம் திகதிகளில் காலி, மாத்தறை மைதானங்களில் நடைபெறவுள்ளது. 7வது கட்டப் போட்டிகள் பெப்ரவரி மாதம் 18ம், 19ம் திகதிகளில் கேகாலை பொது விளையாட்டு மைதானத்திலும், இரத்தினபுரி சீவலி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் அடுத்த மாதம் 22ம், 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி பெப்ரவரி 28ம் திகதி திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளன. அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்களும் மைதானங்களும் பின்பு அறிவிக்கப்படவுள்ளது.

அனைத்து அணிகளுக்கும் பொறுப்பாளர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஒருவரை நியமித்துள்ளது. மேல்மாகாண அணியின் பொறுப்பாளராக பிரதி பொலிஸ் மாஅதிபர் கே. பி. பி. பத்திரண, மத்திய மாகாணம் ரஞ்சித் ரொட்ரிகோ, வட மாகாணம் சி. ஆர்னோல்ட், தென்மாகாணம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தில்ஷான் நாகஹவத்த ஆகியோர் அணிகளின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாளராக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் அப்துல் மனாப், சப்ரகமுவ மாகாண பொறுப்பாளராக சம்மேளனத்தின் செயலாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் உபாலி ஹேவகே, வடமேல், வடமத்திய மாகாண அணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே. டி. சந்ரபால ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இத்தொடரில் இலங்கை உதைபந்தாட்ட ஜாம்பவான்களான ரூமி பகீர் அலி மற்றும் மொஹம்மட் ரூமி ஆகியோர் பயிற்சி அளிக்கும் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளது. ரூமி பகீர் அலி மத்திய மாகாண அணியினதும், மொஹம்மட் ரூமி கிழக்கு மாகாண அணியினதும் பயிற்சியாளர்களாக உதைபந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது.

தேசிய அணியைப் பிரதிநித்தித்துவப்படுத்திய வீரரான பகீர் அலி பல சந்தர்ப்பங்களில் இலங்கை உதைபந்தாட்ட அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார். இவர் மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இந்திய முதல்தர உதைபந்தாட்ட அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ள அனுபவமிக்க பயிற்சியாளராவார். உதைபந்தாட்டத்தை விரும்பும் நாவலப்பட்டி, கம்பளை, கண்டி, நுவரெலிய பகுதிகளிலுள்ள சிறந்த வீரர்கள் அடங்கிய அணிக்கு பயிற்சியாளராக பகீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் பிரதான உதைபந்தாட்டச்சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிய கொழும்பு உதைபந்தாட்ட கழகத்தின் பயிற்சிவிப்பாளர் மொஹம்மட் ரூமி. இவர் கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். மேலும் பொலிஸ் விளையாட்டுக்கழகம், விமானப்படை விளையாட்டுக்கழகங்களிலும் முக்கிய வீரராக விளையாடியுள்ள இவர் கடைசியாக மாலைதீவில் நடைபெற்ற தென்னாசிய உதைபந்தாட்ட சம்பியன் கிண்ண சுற்றுப்போட்டியில் உதவி பயிற்சியாளராகக் கடமையாற்றியிருந்தார்.

அவர் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலைப் பகுதிகள் இணைந்த கிழக்கு மாகாண அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உதைபந்தாட்ட சம்மேனத்தினால் முழு நாட்டையும் பிரதிநிதிதத்துவப்படுத்தி ஏற்பாடு செய்துள்ள மேற்படி சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர் அந்தந்தப் பிரதேச வீரர்களின் திறமையைக் கண்டுகளிக்க ஒரு சந்தர்ப்பமாக அமையவுள்ளது.


Add new comment

Or log in with...