சிறுவர்களை நோயாளிகளாக காட்டி பிச்சை எடுப்போருக்கு எதிராக கண்டி பொலிஸார் தீவிர நடவடிக்கை

சிறுவர்களை நோயாளிகளாக காட்டிபிச்சையெடுக்கும் பெண்கள் தொடர்பில் கண்டி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்வாறு தனது பிள்ளையை நோயாளியாக காட்டி நேரடியாக பணம் வசூலிக்கும் தாயொருவர் தன்பிள்ளை சகிதம் பொலிஸாரினால் கைது செய்துள்ளமையடுத்து கண்டி பொலிஸார் இது தொடர்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது : 

நோய்வாய்ப்பட்ட தனது குழந்தைக்கு மருந்துகளை வாங்குவதற்கு பணமில்லை எனக் கூறி கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு கண்டி நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அக்குழந்தையை மருத்துவ பரிசோதனை செய்ததில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

கண்டி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் கைகளில் இருந்த சிசு எந்நேரமும் உறங்கிக் கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர், குழந்தைக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதை உறுதிப்படுத்த இரத்த மாதிரியை வழங்குமாறு பெண்ணிடம் கேட்கப்பட்டபோது, அப்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.   அதனையடுத்து மூன்று மாத வயதுடைய  அக்குழந்தையின் இரத்த மாதிரியை பெற்று பரிசோதனை செய்வதற்காக   கண்டி மேலதிக நீதவானுடைய அனுமதி பெறப்பட்டது. அத்துடன் குறித்த பெண்ணை எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படியும் குழந்தையை  பேராதனையில் அமைந்துள்ள டிக்கிரி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்குமாறும்   நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுவர்களையும் குழந்தைகளையும் காட்டி  பிச்சையெடுப்போர் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கண்டி பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

(எம்.ஏ.அமீனுல்லா) 


Add new comment

Or log in with...