இன்று முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அவசியமில்லை

இன்று முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அவசியமில்லை-No-Power-Cut-Until-January-31-PUCSL

- பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானம்

இன்று முதல் ஜனவரி 31ஆம் திகதி வரை, திட்டமிட்ட மின்வெட்டுக்கான அவசியமில்லை என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

நாம் தினசரி அடிப்படையில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அவற்றிற்கு தேவையான எரிபொருள் இருப்புகளை மதிப்பாய்வு செய்கிறோம். அந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், மின்வெட்டு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது முடிவு செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு தடவைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாது, தொடர்ச்சியாக விநியோகம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அந்த வகையில், ஜனவரி 31ஆம் திகதி வரையான நிலவரத்தை இன்றையதினம் ஆய்வு செய்தோம்.

நாளை மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது அவசியம்
இதேவேளை நாளையதினம் (27) சுமார் 30MW மின்சாரத்தை உரிய முறையில் நிர்வகித்துக் கொண்டால், அதன்பின்னர் வரும் வார இறுதியில் மின் தேவை குறைவாக அமையும். எனவே உச்ச பயன்பாட்டு வேளையான மாலை 6.30 - இரவு 10.30 வரையான இந்த காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு ஆதரவளிக்குமாறும் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு அவசியம் ஏற்படாது என்றார்.

மின்சார நெருக்கடிக்கு தீர்வாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மின் உற்பத்தி இயந்திரங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான முறைமையை உருவாக்குவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,

மின் பிறப்பாக்கிகளை கொண்டிருக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அவ்வாறான இரண்டு குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. எமது முன்மொழிவுக்கு அவர்கள் சாதகமாக பதிலளித்துள்ளனர்.

முதல் கட்டத்தில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் போது, மின்பிறப்பாக்கிகளை கொண்டுள்ள உரிமையாளர்கள் அந்த மின்பிறப்பாக்கிகளில் இருந்து தங்கள் மின்சாரத் தேவையை பெறுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். அப்போது தேசிய மின்கட்டமைப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் தேவை குறைவடைவதால், பற்றாக்குறை ஏற்படும்போது இவ்வாறு மீதமாவதைக் கொண்டு தேவையை பூர்த்தி செய்வது எளிதாகும்.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மின்பிறப்பாக்கிகளை தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்து, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விநியோகிப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. என்றார்.


Add new comment

Or log in with...