திரைமறைவு நிகழ்ச்சி நிரலில் த.தே.ம.கூ

வினோ எம்.பி குற்றச்சாட்டு

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னாலிருந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் உண்மையை ஆதாரத்துடன் உலகத்துக்கும் நாட்டுக்கும் தெரியப்படுத்தியமையால் படுகொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. தமிழ் தேசத்தின்பால் பற்றுகொண்டு, ஊடகவியலாளர்கள் உழைத்துக்கொண்டிருந்த சமயம் அது தங்களது அரசியல் நடவடிக்கைக்கு சர்வதேச ரீதியாக குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட தொடர்ச்சியான வரலாற்றை நாங்கள் பார்க்கின்றோம். அரசாங்கம் தமிழ் மக்களையும் தமிழ் கட்சிகளையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாங்கள் சர்வதேச ரீதியான ஆதரவை பெற்றால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நியாயமான, நீடித்து நிற்க கூடிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.

நாங்கள் பிளவு பட்டிருந்தால் எமக்கான தீர்வு எட்டாக் கனியாகவே அமைவதுடன் வாழ்நாள் முழுவதும் போராடும் நிலையே ஏற்படும்.

நாங்கள் பிளவுபட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் சாத்தியமான யதார்த்தபூர்வமான தமிழ் மக்களின் தற்போதைய தேவையை நிலை நிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனைத்துக்கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு விடயத்தை அனுப்புயிருக்கின்றோம்.

அதனை குழப்புவதற்காக ஏதோ ஒரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னாலிருந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதை நாம் பார்க்கின்றோம். அதற்கு கூட்டமைப்பில் இருக்கின்ற, ஒற்றுமைப்பட்ட இந்தகட்சிகளில் இருக்கின்ற ஒரு பிரிவினரும் மறைமுகமாக ஆதரவு வழங்கும் நிலை இருக்கிறது என்றார்.


Add new comment

Or log in with...