எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வறிவித்தலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 11ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த கிரிக்கெட் தொடரின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் ரி20 அணிகளின் முன்னாள் தலைவராவார்.
மாலிங்க, ஒரு விசேட பயிற்சியாளராக அவருக்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய காலப் பதவியில், இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு தந்திரோபாய விடயங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, பந்துவீச்சு வியூகங்களுக்கான திட்டங்களை ஆடுகளத்தில் செயல்படுத்த வீரர்களுக்கு உதவுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
மாலிங்கவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற ஓட்டமற்ற பந்துவீச்சுகள் தொடர்பான நிபுணத்துவமும், குறிப்பாக இந்தத் தொடரின் T20 வடிவத்தில், அணிக்கு பெரிதும் உதவும் என்று நம்புவதாக இலங்கை கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.
தனது நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மாலிங்க, எம்மிடம் பல திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனது அனுபவத்தையும் அறிவையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் மேம்பாட்டுக்கு நான் உதவுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
Add new comment