இன்று முதல் ஜனவரி 27 வரை மின்வெட்டுக்கு அவசியமில்லை

இன்று முதல் ஜனவரி 27 வரை மின்வெட்டுக்கு அவசியமில்லை-No Power Cut Until January 27-Janaka Rathnayake

- மின்சாரத்திற்கு அவசியமான எரிபொருள் கையிருப்பில்
- மின்வெட்டு தொடர்பில் வியாழக்கிழமையே பரிசீலிக்கப்படும்

இன்று முதல் ஜனவரி 27ஆம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை எனவும், இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27ஆம் திகதி பரிசீலிக்கப்போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தற்போதுள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பாகவும் அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு எரிபொருள் மற்றும் நாப்தா மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், நிலக்கரி மற்றும் பிற எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடினோம். எதிர்காலத்தில் இந்த அந்நியச் செலாவணி பிரச்சினையும் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.

இதேவேளை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார நெருக்கடிக்கு குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வுகள் பலவற்றை பரிந்துரைத்துள்ளது. மின்சார நுகர்வோரின் ஆதரவுடன் துரிதப்படுத்தப்பட்ட மின் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்திற்கான தேவையை குறைப்பது குறுகிய கால திட்டங்களில் ஒன்றாகும். மேலும், மத்திய கால தீர்வாக அரசு மற்றும் தனியார் துறை மின் உற்பத்தியாளர்களை திறம்பட பயன்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் 3,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தித்திறன் கொண்ட மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றன, மின் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த மின்பிறப்பாக்கிகளில் இருந்து திறன்வாய்ந்த மின் உற்பத்தியை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற மின்பிறப்பாக்கிகளை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி அமைப்புகளை விரைவில் நிறுவுமாறு பரிந்துரைத்துள்ளது.


Add new comment

Or log in with...