மின் துண்டிப்பை இடைநிறுத்த அரசாங்கம் நேற்று தீர்மானம்

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு

இன்று முதல் மின்துண்டிப்பு இடம்பெறாது என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

மின் துடிப்பை மேற்கொள்ளாமலிருக்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மட்டத்திலான விசேட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க மின்சார சபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காக மின்சார சபைக்கு 93 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விசேட பேச்சுவார்த்தையின்போது மின் துண்டிப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் தேசிய மின் கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ஒருவார காலத்தில் தீர்வு காணுமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையில் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டு இன்று முதல் தினமும் இரண்டு மணித்தியால மின் துண்டிப்பை மேற்கொள்ளப்போவதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும் நேற்றைய இந்த பேச்சுவார்த்தையையடுத்து இன்று முதல் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படுவதாக பல தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய இந்த பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க இன்று முதல் மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...