மின்வெட்டுக்கான அனுமதியை வழங்கும் அரச நிறுவனம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மட்டுமேயாகும். மின்சார சபையிலுள்ள சங்கங்களுக்கு மின்வெட்டு தொடர்பாக அனுமதியையோ அதற்கான அறிவித்தலையோ வழங்க முடியாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டில் மின்வெட்டு தொடர்பாக வெளியாகும் செய்திகள் தொடர்பாகவும் மின்வெட்டின் அவசியம் தொடர்பாக, இன்று (24) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவது இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மேலும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பது மின்சார துறையை ஒழுங்குறுத்துகை செய்யும் ஒரு நிறுவனமாகும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் மற்றும் மின்சார சபை சட்டத்தின் பிரகாரம் மின்வெட்டுக்கான அனுமதியை இவ்வாணைகுழு மட்டுமே வழங்கும்.
அந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு தவறான செய்திகளையும், பொதுமக்களுக்கு மின் வெட்டு தொடர்பான அச்சத்தையும், மின்சார சபையிலுள்ள சில தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வருவது சட்டத்திற்கு முரணானது என்பதுடன், மின்வெட்டு குறித்த அறிவித்தலை அவர்ளகால் மேற்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்வெட்டுக்கான அனுமதியை கோரும் கடிதம் இன்று தான் எமக்கு கிடைத்துள்ளது. உடனடியாக இதற்கான அனுமதியை வழங்கவும் முடியாது. குறித்த விடயத்துடன் தொடர்புபட்ட எமது ஆணைக்குழுவின் தொழில்சார் வல்லுனர்கள் ஆராய்ந்து முடிவை வெளியிடுவர்.
ஆனால் தற்போது மின்வெட்டு மேற்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. காரணம் தேவையானளவு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இனியும் எரிபொருள் இல்லை என கூறமுடியாது.
இது மட்டுமின்றி கொழும்பில் நாம் தனியார் வசமுள்ள மின்பிறப்பாக்கிகள் தொடர்பாக கூட்டமொன்றை நடாத்தியுள்ளோம். அதன்மூலமும் எமக்கு மின்சாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மின்சார பாவனையாளர்களாகிய பொதுமக்கள் செய்ய வேண்டியது மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதோடு கடந்த ஒன்றரை வருடங்களாக செலுத்தமால் இருக்கும் மின்சாரப்பட்டியலை செலுத்துவது அவசியமாகும். இவ்வாறு செலுத்தப்படாத மின்சாரப் பட்டியல்கள் சுமார் ரூபா 50 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Add new comment