எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நான்கு மணிநேர மின்துண்டிப்பு

- நாளை செவ்வாய் முதல் ஒரு மணிநேர மின்வெட்டு

இலங்கை மின்சார சபை நேற்று அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை முதல் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நாளை (25) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டாலும் அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீடிக்க வேண்டும் என சபை குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறான காலத்தில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுமென சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மசகு எண்ணெய் தீர்ந்து போயுள்ளதால் நேற்றைய தினம் முதல் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக சீர்குலைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்தை மின் உற்பத்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த எரிபொருள் நேற்று முன்தினம் மதியம் வரையும் போதுமானதாக இருந்துள்ள நிலையில் அதனையடுத்து பெற்றொலியக் கூட்டுத்தாபனம் 600 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை மின்சார சபைக்கு வழங்கியது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி சீர்குலைவு காரணமாக 108 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் இணைப்புக்கு கிடைக்கவில்லை.

வார இறுதி நாட்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என்றும் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...