சுப்பர் லீக் சம்பியன் கிண்ணத்துடன் ரூ.5 மில்லியனை பெற்ற புளூ ஸ்டார்

இலங்கையின் அங்குரார்ப்பண சுப்பர் லீக் கால்பந்து தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு தொடரின் சம்பியன் கிண்ணமும், சம்பியனுக்கான 5 மில்லியன் ரூபாய் பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ”கால்பந்து விருது வழங்கும் விழா 2021” நிகழ்வு நேற்றுமுன்தினம் (20) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மொனார்ச் இம்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது சுப்பர் லீக், இலங்கை தேசிய அணி, முன்னாள் தேசிய அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர். கடந்த வருடம் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக் தொடரில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அணிகள் மற்றும் திறமைகளை காண்பித்த வீரர்கள் மற்றும் சிறந்த நடுவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

லீக்கின் நிறைவில் 9 போட்டிகளில் 7 வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் 22 புள்ளிகளைப் பெற்ற களுத்துறை புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுபர் லீக் கன்னிக் கிண்ணத்துக்கு சொந்தக்காரரானது. இந்நிலையில், குறித்த வெற்றிக் கிண்ணத்துடன் சம்பியன் அணிக்கான பணப் பரிசுத் தொகையான 5 மில்லியன் ரூபாயும் நேற்றைய நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் புளூ ஸ்டார் அணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...