அலட்சியமாக இருப்பின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது டெங்கு!

டெங்கு நுளம்புகள் உட்பட அனைத்து வகையான நுளம்புகளும் பொதுவாக தேங்கி நிற்கும் சிறியளவு நீரில்தான் பல்கிப் பெருகும் இயல்புகளை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது நாட்டில் நுளம்புகள் பல்கிப் பெருகுவதற்குத் தேவையான சூழலும் வாய்ப்புகளும் அத்கரித்துக் காணப்படுகின்றன.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட நீர் தேங்கி நிற்கும் கைவிடப்பட்ட டயர்கள், பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள், சிரட்டைகள், தகர டின்கள், கூரை பீலிகள், இளநீர் குரும்பைகள், பூச்சாடிகள் உள்ளிட்ட பல பொருட்கள் நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு கூறுகின்றது. தற்காலத்தில் டெங்கு நுளம்புகள் செடி, கொடிகளிலும் இன விருத்தி செய்வதுடன் குடிநீர் கிணறுகளிலும் தமது வாழ்விடத்தினை மாற்றி அமைத்துள்ளதாக சுகாதாரப் பிரிவு கூறுகின்றது.

நுளம்புகளால் ஏற்படக் கூடிய மரணங்கள் அதிகரித்து வருவது உலக சுகாதார நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. நுளம்புகளை ஒழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை சுகதேகியாக மாற்றுவதற்கும் பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டு வருகின்றது.

பல்கிப் பெருகும் நுளம்புகள் பல வகை. ஆனாலும் அவற்றில் ஈடிஸ் எஜிப்டை, ஈடிஸ் அல்போபிக்டஸ் , அனோபிளஸ் ,கியுலெக்ஸ் போன்ற சில வகை நுளம்புகள்தான் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக உள்ளன. டெங்கு , சிக்கன்குன்யா, மலேரியா, ஜப்பானிஸ் என்ஸபலைடிஸ், மூளைக்காய்ச்சல், யானைக்காய்ச்சல் போன்ற நோய்கள் நுளம்புகளால் பரப்பப்படுகின்றன.

இவற்றில் டெங்கு நோய்தான நாட்டில் பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறி உள்ளது. எமது நாட்டிலிருந்து மலேரியா நோய் முழு அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் டெங்கு தொற்று மருத்துவத் துறைக்கு சவால் விடும் ஒரு தொற்று நோயாக உள்ளது. டெங்கு என்பது ஈடிஸ் நுளம்பு வகையால் பரவும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். ஈடீஸ் பெண் நுளம்பு மூலம் டெங்கு பரவுகின்றது. ஈடிஸ் நுளம்பானது தொற்று ஏற்பட்ட மனிதர்களிடம் இருந்து குருதி உட்கொள்வதன் மூலம் வைரசினை பெற்று மற்றவர்களுக்குப் பரப்புகின்றது. பொதுவாக டெங்கு நகரப்புறங்களிலேயே அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

டெங்கானது உயிராபத்து அச்சுறுத்தல் மிக்க ஒரு நோய். ஆதலால் அதனை ஆரம்பத்தில் இனம்கண்டால் முழுமையாக குணப்படுத்தி விடலாம். இது முழுமையாக குனப்படுத்தக் கூடிய நோய். இரண்டு மூன்று நாட்களுக்கு கடும் காய்ச்சல், தலைவலி, தசைனார் வலி, மூட்டுவலி, குமட்டல், வாந்திபேதி போன்றவாறான அறிகுறிகளை குறிப்பாக அவதானிக்கலாம். இருப்பினும் அதனை குருதிப் பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும்.

இதன் தாக்கத்தினால் குருதிச் சிறுதட்டு குறைவடைந்து கானப்படும். இதுவே இதன் பிரதான பண்பு. இந்நோயினை ஆரம்பத்தில் கண்டறியத் தவறினால் ஆபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். எனவே நாம் வீட்டுச் சுற்றாடலை தினமும் சித்தமாக பேணி நாட்டின் சுகாதாரத்திற்கும் மனித இன நல்வாழ்விற்கும் பங்காளியாக மாறுவோம்.

நடராஜன் ஹரன்
(பனங்காடு)


Add new comment

Or log in with...