ஹிங்குரான சீனி தொழிற்சாலை நிருவாகத்தில் கம்பனியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடாது!

அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கல்லோயா ஒன்றிணைந்த கரும்பு விவசாய அமைப்பினர் வலியுறுத்தல்

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஹிங்குரான சீனி தொழிற்சாலையின் நிருவாகத்தினை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கரைப்பற்று நுரைச்சோலை விவசாய அமைப்பின் தலைவர் ஆசிரியர் ஏ.எல். மஹ்றுாப் தெரிவித்தார்.

கல்லோயா ஒன்றிணைந்த கரும்பு விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஊடக சந்திபின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஹிங்குரான பிரதேசத்தில் சீனித் தொழிற்சாலை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருந்தது. பின்னர் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது முற்றாக மூடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு அரசாங்கம் சீனித் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டது. ‘கல்லோயா கம்பனி’ என்ற பெயரில் அரசாங்கம் 51 சத வீதப்பங்கும், எல்.ஓ.எல்.சீ மற்றும் பிறவுண் கம்பனிகள் இணைந்து 49 சதவீதம் பங்கும் முதலீடு செய்து சீனித் தொழில்சாலையை இயங்க வைத்தன.

கல்லோயா கம்பனியினர் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதுடன் விவசாயிகளை அடக்கியாள்கின்றனர்.

51 சதவீத பங்கு முதலீடு செய்துள்ள அரசு நிருவாகம் செய்யாமல் 49 சதவீத பங்கு முதலீடு செய்யும் கல்லோயா கம்பனியினர் நிருவாகம் செய்து அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயமானது? இதன் பணிப்பாளர் சபையில் அரசு சார்பாக 5 பேரும், கல்லோயா கம்பனி சார்பாக 4பேரும் உள்ளனர்.ஆனால் அரசு சார்பான பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் விவசாயிகளின் நலன்களை ஒருபோதும் கவனத்தில் கொள்ளாது கல்லோயா கம்பனியினரின் செயற்பாட்டுக்கும் இலாபத்திற்கும் முற்று முழுதாக ஒத்துழைத்து வருவதை எமது அமைப்பு கண்டிக்கின்றது என்று அக்கரைப்பற்று நுரைச்சோலை விவசாய அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இது விடயமாக கடந்த 2021.12.10 ஆம் திகதி கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புகான இராஜாங்க அமைச்சர் ஜானக்க வகும்பரவை கொழும்பில் விவசாய அமைப்பினர் சந்தித்து கல்லோயா கம்பனி தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து மகஜர் ஒன்றினையும் இராஜாங்க அமைச்சரிடம் கையளித்தோம். மிக விரைவாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வகும்பர இதன் போது எமது அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் 51 சதவீத பங்கு முதலீடு செய்துள்ள அரசு நிருவாகம் செய்யாமல் 49 சதவீத பங்கு முதலீடு செய்யும் கல்லோயா கம்பனியினர் நிருவாகம் செய்து ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்த்து அரசு நிருவாகத்தை நடத்த வேண்டும். இது விடயமாக ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என கல்லோயா ஒன்றிணைந்த கரும்பு விவசாய அமைப்பினர் கோரிக்கை முன்வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்லோயா ஒன்றிணைந்த கரும்பு விவசாய அமைப்பின் தலைவர் காமினி மற்றும் கல்லோயா ஒன்றிணைந்த கரும்பு விவசாய அமைப்பின் நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...