- மருத்துவ அறிக்கைகளில் விசேட நோய் நிலைமைகள் எதுவும் இல்லை: சட்ட மாஅதிபர்
2016 இராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரை காயப்படுத்தியமை மற்றும் விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சுகவீனம் காரணமாக பாட்டலி சம்பிக்க ரணவக்க கடந்த ஜனவரி 11ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருக்கவில்லை என்பதுடன், அதற்கு முன்தினம் (10) அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆயினும் இன்றையதினம் அவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு, கடந்த வழக்குத் தவணையின்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்த நீதவான், அவரது சுகவீனம் தொடர்பில் அறிக்கை வழங்கிய வைத்தியரிடம் வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, சம்பிக்க ரணவக்கவிற்கு மேற்கொண்ட 10 வைத்திய சோதனை அறிக்கைகள் போலியானவை எனவும், அவருக்கு விசேட நோய் நிலைமைகள் எதுவும் இல்லையென சட்ட மாஅதிபர் தரப்பில் நீதிமன்றிற்கு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
ஆயினும் தனது கட்சிக்காரர் ஒரு போதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் மன்றின் அழைப்பாணையை மீறியதில்லை என சுட்டிக்காட்டிய, சம்பிக்க ரணவக சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உரிய விசேட வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னரே உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை உரிய முறையில் முன்னெடுத்து விரைவாக நிறைவு செய்யும் நீதிமன்றத்தின் நோக்கத்திற்கமைய வழக்கை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்த நீதவான், இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களை அடுத்து வழக்கை பெப்ரவரி 18 மற்றும் 23ஆம் திகதிகளில் எடுத்துக் கொள்வதற்கான உத்தரவை வழங்கினார்.
Add new comment